சம்பாதிக்க மட்டும் ஹிந்தி மொழி வேண்டுமா? தி.மு.க.,வுக்கு பவன் கல்யாண் கேள்வி
காக்கிநாடா:“ஹிந்தி மொழியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதிகள், பணத்துக்காக, தங்கள் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வது ஏன்?” என, பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மும்மொழித் திட்டம் வாயிலாக ஹிந்தி திணிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையே தொடரும் என்றும், முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.இதற்கு விளக்கம் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் உறுதி அளித்துவிட்டு இப்போது 'யு டர்ன்' அடிப்பதற்கு காரணம் யார்?' என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில், பா.ஜ., கூட்டணி கட்சியான, ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் பகுதியில், கட்சியின் 12வது ஆண்டு விழாவில், நேற்று பங்கேற்றார். அப்போது, ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக, தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார்.பவன் கல்யாண் பேசியதாவது: நம் நாட்டின் மொழியியல் பன்முகத் தன்மையை பாதுகாப்பதற்கு, வெறும் இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் அவசியம். தேசத்தின் ஒருமைப்பாட்டை பேணி பாதுகாக்கவும், மக்களிடையே அன்பையும் ஒற்றுமையை வளர்க்கவும் பல மொழிகள் தேவை. சமஸ்கிருதத்தை, பலரும் தேவையில்லாமல் விமர்சிக்கின்றனர். அது ஏன் என்பது புரியவில்லை. தமிழக அரசியல்வாதிகள், ஹிந்தியை எதிர்க்கின்றனர். ஆனால், பணம் சம்பாதிப்பதற்கு மட்டும், தங்களுடைய திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கின்றனர்.ஹிந்தியில் எடுக்கப்பட்ட படங்களை தமிழில் டப்பிங் செய்கின்றனர். பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை விரும்பும் அவர்கள், ஹிந்தியை விரும்பாதது மாதிரி நடிக்கின்றனர். ஹிந்தி வாயிலாக வரும் படம் வேண்டும்; ஹிந்தி வேண்டாம் என்றால், அவர்கள் என்ன லாஜிக்கில் இப்படியெல்லாம் பேசுகின்றனர் எனப் புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.எந்த கட்சியின் பெயர் குறிப்பிட்டும் பவன் கல்யாண் பேசவில்லை என்றாலும், அவருடைய பேச்சுக்கு எதிராக தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.
'நடிகரின் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை'
பவன் கல்யாண் பேச்சுக்கு, தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்துள்ள பதில்: மொழிப் பிரச்னையில் தி.மு.க.,வுக்கு யாரும் ஆலோசனை சொல்லி, அதை கேட்க வேண்டிய நிலையில் இல்லை. 1938 முதல் ஹிந்தியை எதிர்த்து வருகிறோம். 'இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம்' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஏற்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்காக எந்த நடிகரிடமும் ஆலோசனை கேட்கவில்லை; கேட்கவும் முடியாது.இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பவன் கல்யாண் பிறந்திருக்கவே வாய்ப்பில்லை. அதனால், வரலாறு குறித்து அவர் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஹிந்தியை இப்போதுதான் தி.மு.க., எதிர்ப்பது போல பேசுவது சரியல்ல. தொடர்ந்து போராடி வருகிறோம்.தாய்மொழியில் கற்பது தான் சிறந்த அறிவை தரும். அதனாலேயே, ஹிந்தியை புகுத்த முயற்சிப்பதை எதிர்க்கிறோம். பா.ஜ., என்ன நினைக்கிறதோ, அதை பொது வெளியில் பேசினால், அதனால் தனக்கு ஏதும் சகாயம் கிடைக்கும் என நினைத்து, பவன் கல்யாண், பா.ஜ.,வுக்கு ஆதரவான கருத்துக்களை மொழி பிரச்னையில் பேசி உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.