ஈரோடு : ஈரோடு அருகே நள்ளிரவில் விபத்தை ஏற்படுத்திய அரசு டாக்டர், சிக்கிய உடலுடன் காரை, 3 கி.மீ., துாரம் ஓட்டிச் சென்றதும், பின், உடலை கொண்டு வந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் வீசி சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு, சேனாபதிபாளையம், கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி, 55; வீடு கட்டி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த, 24ம் தேதி இரவு, 'ஹோண்டா சைன்' பைக்கில் வெளியில் சென்றவர், நள்ளிரவை கடந்தும் வீட்டுக்கு வரவில்லை. அதிகாலை, ரங்கம்பாளையம் - திண்டல் ரிங் ரோட்டில், மணி உடலில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக, அவரது மனைவி லோகசுந்தரிக்கு தகவல் கிடைத்தது.பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் பரிசோதனையில், மணி இறந்து விட்டது தெரிய வந்தது. லோகசுந்தரி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவக்கல்லுாரி மருத்துவர் ராவணன். இவரது வீடு வெள்ளோடு அருகே அலகாபுரத்தில் உள்ளது. கடந்த, 24ம் தேதி இரவு, 'போர்டு பிகோ' காரில் சென்றுள்ளார். அப்போது தனக்கு முன்னால் பைக்கில் சென்ற மணி மீது மோதியுள்ளார். ஆனாலும், காரை நிறுத்தாமல், ௩ கி.மீ., துாரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். போர்டிகோவுக்குள் கார் ஏறாததால் இறங்கி பார்த்துள்ளார். அப்போது, காரின் அடியில் மணியின் உடல் இருந்தது. உடலை மீட்டு, கார் பின்னிருக்கையில் போட்டு, விபத்து நடந்த இடத்துக்கு வந்த ராவணன், அந்த இடத்தில் உடலை வீசி சென்றுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.இதையறிந்த மணியின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்து, டாக்டரை கைது செய்யக்கோரி, ரங்கம்பாளையம் ரிங் ரோட்டில், நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, மறியல் முடிவுக்கு வந்தது. ஒன்றரை மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து தொடங்கியது.டாக்டர் ராவணன் மீது விபத்து ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தது, விபத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார், நேற்று மாலை அவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.