எவ்வளவு சொத்து உள்ளது என தெரியாதா? பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை
சென்னை: 'நிதி அமைச்சராக இருந்தவருக்கு தன் சொத்துக்கள் குறித்த விபரங்கள் நினைவில் இல்லையா' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், தேர்தல் வழக்கு விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தோல்வியுற்றார். நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் நேரில் ஆஜரானார். அவரிடம், எம்.பி., நவாஸ் கனி தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த வேட்புமனு, அதில் குறிப்பிட்டிருந்த தொழில்கள், அதன் வாயிலாக கிடைத்த வருமானம், நிலங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ''நான் வைத்திருந்த பால் பண்ணையில், 40 மாடுகள் இருந்தன. அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வருகிறேன். ''மாடு வளர்ப்பு, விவசாயம் மட்டுமின்றி, பல தொழில்கள் செய்து வருகிறேன்,'' என்றார். வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள நிலங்கள் தொடர்பான கேள்விகளுக்கு, ''நினைவில் இல்லை,'' என, பன்னீர்செல்வம் பதிலளித்தார். அப்போது, நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர், 'மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்த உங்களுக்கு இது நினைவில் இல்லையா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு, ''என் ஆடிட்டருக்கு தான் தெரியும்,'' என, பன்னீர்செல்வம் கூறினார். நவாஸ் கனி தரப்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் கோபம் அடைந்த பன்னீர்செல்வம், ''நான் தொடர்ந்த தேர்தல் வழக்கில், என்னை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? நான் வாங்கிய சில நிலம், பஞ்சமி நிலம் என தெரிந்ததும், திரும்ப ஒப்படைத்து விட்டேன்,'' என, குறுக்கு விசாரணையின்போது, பன்னீர்செல்வம் பதிலளித்தார். குறுக்கு விசாரணை நிறைவு பெறாததால், வழக்கை ஜன., 9ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.