சென்னை: ரஷ்ய சிறையில் சிக்கித் தவித்த டாக்டர் ஜெகதீஸ்வரன், மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு, நேற்று இரவு சென்னை வந்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெகதீஸ்வரன். இவர், நண்பருடன் செப்., 15ல் ரஷ்யா விற்கு சுற்றுலா சென்றார். ரஷ்ய விமான நிலையத்தில், அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகளின் சோதனையில், ஜெகதீஸ்வரன் மருத்துவ படிப்பை உக்ரைனில் படித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரையும், அவரது நண்பரையும் ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்தனர். பத்து நாட்களுக்கு பின், டாக்டர் ஜெகதீஸ்வரனின் நண்பரை மட்டும் விடுவித்தனர். ஜெகதீஸ்வரனை உக்ரைனுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறையில் அடைத்தனர். பதற்றம் அடைந்த டாக்டர் குடும்பத்தினர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மூலம் தகவல் கொடுத்து, அவரை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களின் தீவிர முயற்சியால், ஜெகதீஸ்வரன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து டில்லி வழியாக ஜெகதீஸ்வரன் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில், குடும்பத்தினரும், பா.ஜ.,வினரும் அவரை வரவேற்றனர். ஜெகதீஸ்வரன் கூறுகையில், ''நான் கைதானது குறித்து, ரஷ்யாவில் உள்ள இந்திய துாதரகத்துக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அமைச்சர்களின் முயற்சி யால் விடுதலையானேன்,'' என்றார்.