திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்: ஸ்டாலின்
சென்னை:''திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்ப்பது மட்டுமல்ல; பதம் பார்க்கும் சொல்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள, 'திராவிட இயக்கமும், கருப்பர் இயக்கமும்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நுாலின் முதல் பிரதியை, முதல்வர் ஸ்டாலின் வெளிட்டார். தி.க., தலைவர் வீரமணி பெற்றார்.விழாவில், துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், ''தி.மு.க., உள்ளவரை பாசிச சக்திகளின் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது,'' என்றார்.அமைச்சர் துரைமுருகன பேசுகையில், ''அமெரிக்காவில் கருப்பர் இனத்தை அடிமையாக வைத்திருந்தனர். தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றவில்லை என்றால், திராவிடர்களை ஆரியர்களும் அடிமையாக வைத்திருப்பர்,'' என்றார்.அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிவர்கள் ஆங்கிலேயர்கள்; ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் கருப்பர்கள். அவர்கள் இருவரும் மண்ணின் மைந்தர்கள் அல்ல, குடியேறியவர்கள். ஆனால், திராவிடர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்; ஆரியர்களால் தண்டிக்கப்பட்டவர்கள்,'' என்றார்.முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஒடுக்கப்பட்ட தமிழக மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும், மேன்மைக்கும் தோன்றியது தான் திராவிட இயக்கம். அடிமைகளை விட கேவலமாக தமிழக மக்கள் நடத்தப்பட்டனர். கேட்டால், 'இதுதான் மனு நீதி' என்றனர். அந்த அநீதிக்கு எதிராக கேள்வி எழுப்பி, போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற இயக்கம் தான் திராவிட இயக்கம். அடிமை சிந்தனைகளை ஆட்சி, அதிகாரம், சட்டங்கள் வாயிலாக உடைத்துள்ளோம். ஜாதியின் பெயரால், சாஸ்திர சம்பிரதாயங்கள் பெயரால் உள்ள தடைகளை தகர்த்தெறிந்த அரசியல் இயக்கம் தான் தி.மு.க., அதாவது தடை என்றால் உடை என்பது தான் நமது 'ஸ்டைல்'.திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே, ஆரியம் அஞ்சி நடுங்குகிறது. திராவிடம் என்ற சொல் சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. சட்டசபையில் பேசுவதற்கு, 'திராவிட மாடல்' என எழுதிக் கொடுத்தால், ஒருத்தர் அதை குறிப்பிட்டு பேச மாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தில், 'திராவிட நல் திருநாடும்' என சொன்னால், சிலரின் நாக்கு தீட்டாகி விடுமா? திராவிடம் என பாடினால் சிலருக்கு வாயும், வயிறும் எரியுமானால், திரும்ப திரும்ப பாடுவோம். திராவிடம் என்பது இடம், மொழி, இனத்தின் பெயராக இருந்தது. ஆனால், இன்று ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கிற புரட்சி பெயராக திராவிடம் உருவெடுத்திருக்கிறது. திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்ப்பது மட்டுமல்ல; பதம் பார்க்கும் சொல். இவ்வாறு அவர் பேசினார்.