உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு தொடர்ச்சி மலையில் கிணறுகள் அமைத்து குடிநீர்

மேற்கு தொடர்ச்சி மலையில் கிணறுகள் அமைத்து குடிநீர்

சென்னை : ''மேற்கு தொடர்ச்சி மலை அருகில் பெரிய கிணறுகள் அமைத்து, அந்த தண்ணீரை கொண்டு வர, ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டது. முதல்வரிடம் கலந்து பேசி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:அ.தி.மு.க., - மான்ராஜ்: ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக மட்டுமின்றி, 'போர்வெல்' குடிநீரும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆழ்குழாய் குடிநீரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. எனவே, கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக முழுமையாக குடிநீர் வழங்க வேண்டும்.அமைச்சர் நேரு: வத்திராயிருப்பு பேரூராட்சியில், 20,321 பேர் வசிக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் ஒருவருக்கு, 70 லிட்டர் குடிநீர் வழங்க, 14.2 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. இதற்காக, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 4 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சியில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 98 சிறு பம்புகள் வாயிலாக, 11.8 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. தனி நபருக்கு 77 லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது. இங்கு இருக்கும் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டு இருந்தால், புதிய கூட்டு குடிநீர் திட்டம்தான் தீர்வாக அமையும். ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அருகில் பெரிய கிணறுகள் அமைத்து, அந்த தண்ணீரை கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்கள் மட்டும் தான் அந்த தண்ணீர் கிடைக்கும்; மீதி மூன்று மாதங்களுக்கு தண்ணீர் இருக்காது என்ற காரணத்தால், தாமிரபரணியை நீராதாரமாக கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.முதல்வரிடம் கலந்து பேசி, நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஆராய்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி