இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் அசுர வேக பைக்குகளின் தயாரிப்பை நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இந்தியாவில், விபத்துகள் மற்றும் அதில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதிலும் டூ - வீலர் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகமாகவுள்ளது. புள்ளி விபரங்கள்
கடந்த, 2021ல், டூ - வீலர் விபத்துக்களில் 69,385 பேர் பலியான நிலையில், 2022ல், 75,000 பேர் உயிரிழந்திருந்தனர். அது மட்டுமின்றி, விபத்துக்களில் இறக்கும் பாதசாரிகளில் நான்கில் ஒருவர், டூ - வீலர்கள் மோதியே இறப்பதும், சில ஆண்டுகளின் புள்ளி விபரங்களில் உறுதியாகியுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம், இந்த டூ - வீலர்களின் அசுர வேகம் தான்.கடந்த, 2022ல் நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 71 சதவீதம் பேர் பலியானதற்கு, அசுர வேகமே காரணமென்று, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களே தெரிவித்துள்ளன. உண்மையில், இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான அதி விரைவுச் சாலைகளிலும் கூட, டூ - வீலர்களுக்கு அதிகபட்சம் 80 கி.மீ., வேகம் தான், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், மணிக்கு 300 கி.மீ., வேகம் செல்லும் 1,000 சி.சி., டூ - வீலர்களைத் தயாரிப்பதற்கு, அனுமதி வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 200 சி.சி., 300 சி.சி., என்ற திறன் அளவில் தயாரிக்கப்பட்டு வந்த பைக்குகள், இப்போது படிப்படியாக உயர்ந்து, 1,000 சி.சி.,என்ற அபாய அளவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ரோடுகளின் நிலையும், தரமும் அந்தளவுக்கு உயரவில்லை.இந்த முரண்பாடு, வேறு எந்த நாட்டிலும் இல்லை. இளைஞர்களை இந்த அசுர வேக பைக்குகள் பெரிதும் ஈர்ப்பதால், அதை வைத்து மிகப்பெரிய வணிகம் நடந்து வருகிறது. அபராதம்
இதில் விலை மதிப்புமிக்க இளைஞர்களின் உயிர்கள் பறிபோகின்றன. ஐந்தாண்டுகளில், விபத்துகளில் இறந்தவர்களில், 66 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பது தேசத்துக்கே மிகப்பெரிய இழப்பாகும்.இந்த மரணங்களால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிலை குலைந்து போகின்றன. அதிவேகம் செல்லும் பைக் என்று தெரிந்தும், அதிக விலை கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ள பெற்றோர்கள் பலர், தங்கள் குழந்தைகளைப் பறி கொடுத்து விட்டு, மனம் வெதும்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.சிசி அளவு, வேகத்தின் அளவை வைத்தே, இந்த பைக்குகளுக்கு அதிக விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இளைஞர்கள், அதை அனுபவித்து உணரும் நோக்கில் அதிகபட்ச வேகத்தில் சென்று, விபத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வளவு வேகம் செல்லும் பைக்குகளைத் தயாரிக்க அனுமதித்து, அவற்றுக்கு அதிக விலை நிர்ணயிக்கவும் அனுமதித்து, அதற்கேற்ப வரியும் வாங்கும் அரசு, அந்த பைக்கில் அதிக வேகம் போவதை மட்டும் குற்றம் என்று கூறி, அபராதம் விதிக்கிறது.இந்த பைக்குகளை, ரேஸ் ரோடுகளைத் தவிர, வேறு எங்கும் அனுமதிக்கவே கூடாது; அதேபோல, 100 கி.மீ.,வேகத்துக்கும் குறைவாகச் செல்லக்கூடிய பைக்குகளைத் தயாரிப்பதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது, பாதிக்கப்பட்ட பல லட்சம் பெற்றோரின், பல ஆயிரம் குடும்பங்களின் கண்ணீர்க் கோரிக்கையாக உள்ளது.
ரோட்டில் ஓட்ட அனுமதியில்லை!
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுதியுள்ள கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கூறுகையில், ''இந்திய மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 2 (28) ன் படி, அதிக திறனும், வேகமும் கொண்ட வாகனங்களை, பைக்குகளாக வகைப்படுத்த முடியாது; அவற்றை மக்களுக்குரிய ரோடுகளிலும் இயக்கக்கூடாது; இந்திய இளைஞர்களின் நலனை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இந்த பைக்குகளை தயாரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது,'' என்றார்.-நமது சிறப்பு நிருபர்-