காந்தா படத்துக்கு தடை கோரி பாகவதரின் உறவினர் வழக்கு துல்கர் சல்மானுக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழ் திரை உலகின் முதல் 'சூப்பர் ஸ்டார்' எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, காந்தா படத்துக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க, நடிகர் துல்கர் சல்மானுக்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் ஓய்வுபெற்ற இணை செயலருமான தியாகராஜன், 64, என்பவர், இவ்வழக்கை தாக்கல் செய்து உள்ளார். மனுவில், அவர் கூறியுள்ளதாவது: துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த 'வேபேரர் பிலிம்ஸ்' ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்பிரிட் மீடியா' நிறுவனங்கள் இணைந்து, காந்தா என்ற பெயரில் படத்தை தயாரித்துள்ளன. என் தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியிடப்பட்ட நிலையில், வரும், 14ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியிருந்தாலும் கூட, அதை மக்கள் நினைவு படுத்த முடியும். பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண் பார்வை இழந்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், சொந்தமாக பங்களா, விலை உயர்ந்த கார்களை, என் தாத்தா வைத்திருந்தார். எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதுாறான முறையில் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர 7வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், வரும் 18ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.