வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பணிபுரியும் அரசு அலுவலங்களில் தனிப்பட்ட முறையில் ஏன் பேசவேண்டும் அது ஒன்றும் பொது இடமில்லையே சாமி. மக்களுக்காக சேவை செய்யும் இடமாகும். எல்லா அரசு அலுவலங்களிலும் இதை செய்தால் லஞ்சம் வாங்கும் பழக்கம் குறைய நேரிடும்.
சென்னை: சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, வீடியோ காட்சிகளாக மட்டுமின்றி, குரல் பதிவுகளையும் கண்காணிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சார் - பதிவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும், தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொது மக்களை, சார் - பதிவாளர்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக தலைமை அலுவலக அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்து, சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பேச்சுகளையும் கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கண்காணிப்பு இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஐந்து இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை, நேரலை முறையில், டி.ஐ.ஜி., அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதுவரை காட்சிகளை மட்டுமே காண முடிந்தது. தற்போது, குரல் பதிவுகளையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், பத்திரப்பதிவின் போது, பொது மக்களிடம், சார் - பதிவாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை, தலைமை அலுவலகத்தில் இருந்து துல்லியமாக கேட்க முடியும். இதனால், பொது மக்கள் யார், தரகர் யார் என்பதை, எளிதாக கண்டு பிடிக்கலாம். தரகர்கள் நடமாட்டத்தை அனுமதிக்கும் சார் - பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதிருப்தி இதுகுறித்து, சார் - பதிவாளர் ஒருவர் கூறியதாவது:
சார் - பதிவாளர் அலுவலகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, மோசடியை தடுக்க, கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அதே நேரத்தில், அங்கு சரியான முறையில் பணிபுரியும் அலுவலர்கள் சாதாரணமாக பேசிக்கொள்ளும் விஷயங்களை கூட, தலைமை அலுவலகத்தில் இருப்பவர்கள் கேட்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதை மேலதிகாரிகள் கேட்பது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு வகையில் இது ஒட்டுக்கேட்பதுபோல் ஆகாதா என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பணிபுரியும் அரசு அலுவலங்களில் தனிப்பட்ட முறையில் ஏன் பேசவேண்டும் அது ஒன்றும் பொது இடமில்லையே சாமி. மக்களுக்காக சேவை செய்யும் இடமாகும். எல்லா அரசு அலுவலங்களிலும் இதை செய்தால் லஞ்சம் வாங்கும் பழக்கம் குறைய நேரிடும்.