உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன், மகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் ஈ.டி., சோதனை

துரைமுருகன், மகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் ஈ.டி., சோதனை

வேலுார்:வேலுாரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி., கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த், 2019ல் வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, காட்பாடி காந்தி நகரில் உள்ள அவர்களின் வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பள்ளியில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து, 10 லட்சம் ரூபாய், சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயா வீடு, இவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்கோட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க., பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் சிமென்ட் கிடங்கில் இருந்து, 11.51 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த ரூபாய் நோட்டு கட்டுகளில் ஊர் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டிருந்தன.இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லுாரி, துரைமுருகனுக்கு சொந்தமான பி.எட்., கல்லுாரி.முன்னாள் நகர செயலரும், வேலுார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைப்பாள ருமான பூஞ்சோலை சீனிவாசனின் பள்ளிக்குப்பம் கிராமத்தில் உள்ள வீடு, அவரது சகோதரி விஜயாவுக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு போன்ற இடங்களில், 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்த வந்தனர்.கதிர் ஆனந்த், துபாய் சென்றுள்ளதாலும், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்ததாலும் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிகாரிகள் காலை, 7:00 முதல், மதியம், 2:18 மணி வரை வீட்டின் வெளியே காத்திருந்தனர்.அப்போது, கதிர் ஆனந்த், இ - மெயிலில் வேலுார் மாநகராட்சி துணை மேயரான சுனில் குமார், காட்பாடி வடக்கு தி.மு.க., செயலர் வன்னிராஜா முன்னிலையில் சோதனை நடத்த அனுமதி அளித்தார்.இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர். தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர் துரைமுருகன் வீடு முன் குவியத்தொடங்கினர். சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி சோதனை நடத்தி வரும் நிலையில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் காலை, 7:00 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இங்கும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

துரைமுருகன் ஆலோசனை

சென்னை, ஜன. 4-அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில், அமலாக்கத்துறை, 'ரெய்டு' நடந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தன் இல்லத்தில், வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் ஆலோசித்தார். இதையடுத்து, அவர் அளித்த பேட்டி: வீட்டுக்கு யார் வந்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர். வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்று, அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. இந்த ரெய்டு தொடர்பாக, உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ; அந்த அளவுக்குதான் எனக்கும் தெரியும். நான் என்பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்இவ்வாறு அவர் கூறினார்.பின், தன் அறைக்கு சென்ற துரைமுருகன், பட்ஜெட் திட்டங்கள் தொடர்பாக, நீர்வளத்துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் தன் சமூக வலைதளப் பக்கத்தில், 'ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழ் வாழ்க' என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறை நடவடிக்கையுடன் இதை தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களில் முதல்வரின் பதிவை வரவேற்று, ஆளுங்கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ