கிராம சாலை திட்டத்தில் 67 பாலங்கள் கட்டுவதற்கு நிதி பெற முயற்சி: வேலு
சென்னை : ''கிராம சாலை திட்டத்தில், 67 பாலங்கள் கட்டும் பணிகள் எஞ்சியுள்ளன. அதற்கு உரிய தொகையை கேட்டு, நிதித் துறையை அணுகியுள்ளோம்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.சட்டசபையில் நேற்று, தி.மு.க., - இளங்கோ, காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை, அ.தி.மு.க., - ஜெயராமன் உள்ளிட்டோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் வேலு கூறியதாவது:ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள், அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும். அந்த சாலையில், 1.22 லட்சம் வாகனங்கள் கடந்து செல்வது தெரியவந்துள்ளது. அங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.நொய்யல் ஆற்றில் உயர்மட்ட பாலம் குறுகலாக உள்ளதால், புதிதாக பெரிய பாலம் அமைக்க 2025 - 26ம் நிதியாண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.படப்பை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் மேம்பாலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசியுள்ளேன். நடப்பாண்டு பணிகள் முடிக்கப்படும். மதுரை விமான நிலையம் செல்லும் பாலத்தை அகலப்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நான்கு வழி ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்படும்.கிராம சாலை திட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன; 67 பாலங்கள் கட்டும் பணிகள் எஞ்சியுள்ளன. அதற்கு உரிய தொகையை கேட்டு, நிதித் துறையை அணுகியுள்ளோம். கோவை, சரவணப்பட்டி பாலம் அமைக்க ஏற்கனவே ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் நடக்கவுள்ளதாக கூறி, திட்டம் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, கலெக்டரிடம், இரு வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், விசாரணை நடந்தது.இப்போது பாலம் கட்டுங்கள் என்கின்றனர். எனவே, ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு சரவணப்பட்டி பாலம் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.