இளங்கோவன் ஆதரவு நிர்வாகி தமிழக காங்கிரசில் ராஜினாமா
மறைந்த இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்த, தமிழக காங்கிரஸ் மூத்த துணை தலைவர் நாசே ராமச்சந்திரன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.,வாக இருந்த, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், கடந்த ஆண்டு டிச., 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின் அவரது மகன் சஞ்சய், இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவன் ஆதரவாளர்கள் விரும்பினர். அத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தராமல், தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனால், இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் பொருளாளரும், தற்போதைய துணைத் தலைவருமான நாசே ராமச்சந்திரன், இளங்கோவனின் நெருக்கமான நண்பர். இளங்கோவன் உயிரோடு இருந்தபோது, கடந்த லோக்சபா தேர்தலில், நாசே ராமச்சந்திரனுக்கு கடலுார் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று தர முயன்றார். ஆனால், அவரது பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது. விஷ்ணு பிரசாத்துக்கு கடலுாரிலும், வழக்கறிஞர் சுதாவுக்கு மயிலாடுதுறையிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நாசே ராமச்சந்திரன், இளங்கோவனின் ஆதரவாளர்களை தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இளங்கோவன் பெயரில் பேரவை துவக்கி, தனியார் இடத்தை விலைக்கு வாங்கி, அதில், இளங்கோவனுக்கு சிலை அமைக்கவும் திட்டமிட்டார். ஆனால், இளங்கோவன் சிலை அமைக்கும் முயற்சிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. மேலும், இளங்கோவன் ஆதரவாளர்களை ஓரங்கட்டும் முயற்சியும், தமிழக காங்கிரசில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த நாசே ராமச்சந்திரன், துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. இதற்கிடையில், காங்கிரஸ் தலைமை மீது நாசே ராமச்சந்திரன் அதிருப்தியில் இருப்பதை அறிந்து, தங்கள் பக்கம் வருமாறு பா.ஜ., தரப்பில் சிலர் அழைப்பு விடுத்து வருகின்றனர். அ.தி.மு.க., தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -