கார் ஏற்றி முதியவர் கொலை அம்பலம்; தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது
திருப்பூர்; திருப்பூர் அருகே, கார் மோதி முதியவர் இறந்ததாக கருதப்பட்ட வழக்கில், கார் ஏற்றி அவர் கொல்லப்பட்டது உறுதியான நிலையில், தி.மு.க., பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 57. நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் டீக்கடைக்கு மொபட்டில் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். முன்விரோதம் அதே வழியில், தாறுமாறாக அதிவேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற கார் குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர். அதில், சாமளாபுரம் பேரூராட்சி தி.மு.க. தலைவர் விநாயகா பழனிசாமி, 60 என்பவர், போதையில் காரை ஓட்டி சென்றது தெரிந்தது. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. பேரூராட்சி தலைவரிடம் விசாரித்தபோது, முன்விரோதம் காரணமாக மொபட் மீது காரை ஏற்றி முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனால், விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், விநாயகா பழனிசாமியை கைது செய்தனர். மதுபோதை இது குறித்து போலீசார் கூறியதாவது: முதியவர் பழனிசாமி இறப்பில் சந்தேகம் இருந்த காரணத்தால், தப்பி சென்ற விநாயகா பழனிசாமியிடம் விசாரித்த போது, அவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த பழனிசாமி, சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மக்கள் பயன்பாடில்லாத தனியார் இடத்தில் அமைக்கப்பட்ட சாலை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ச்சியான புகார்கள் காரணமாக, ஏற்பட்ட முன்விரோதத்தில் பழனிசாமி மீது கார் ஏற்றி கொன்றது தெரிந்தது; அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.