வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் சரியான முறையில் மின்சாரம் கொடுக்க வேண்டும் பிறகு என்ன கொடுமையோ செய்து கொள்ளட்டும்
சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு எளிதில், 'சார்ஜிங்' வசதி கிடைக்க, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பொது, 'சார்ஜிங்' மையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.நாடு முழுதும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, பேட்டரியில் ஓடும் மின் வாகனங்கள், சி.என்.ஜி., எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதற்கு ஏற்ப பலரும், மின் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அவற்றுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்திற்கும் ஒரு மையம்; நகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு மையம் அமைக்க, பொதுத்துறை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக மின் வாரியம், முதல் கட்டமாக, 100 துணை மின் நிலையங்களில், காலியாக உள்ள இடங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிட்டது.ஆனால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது, பசுமை மின் திட்டங்களை ஊக்குவிக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலிருந்து, பசுமை எரிசக்தி கழகம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பொது சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்து உள்ளது.சென்னையில், சென்னை மாநகராட்சி, பசுமை எரிசக்தி கழகம் இணைந்து, 100 சார்ஜிங் மையங்கள் அமைக்க உள்ளன. இதேபோல, மற்ற மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், தலா ஐந்து முதல் பத்து வரை, தேவைக்கு ஏற்ப சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பொது சார்ஜிங் மையங்கள் அமைக்க, முக்கிய நகரங்களில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. 'எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாநிலம் முழுதும் மின் வாகனங்களுக்கு, தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்கும்' என்றார்.
முதலில் சரியான முறையில் மின்சாரம் கொடுக்க வேண்டும் பிறகு என்ன கொடுமையோ செய்து கொள்ளட்டும்