காற்றாலைகளில் பேட்டரி ஸ்டோரேஜ் 7 இடங்களில் அமைக்கிறது மின் வாரியம்
சென்னை:காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 1,500 மெகா வாட்டை ஒரு மணி நேரம் சேமித்து மீண்டும் பயன்படுத்தும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' வசதியை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏழு துணை மின் நிலையங்களில் மின் வாரியம் அமைக்க உள்ளது. தமிழகத்தில், 9,388 மெகா வாட் திறனில் காற்றாலை, 9,500 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. இவற்றை, தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பதுபோல், நம் நாட்டிலும் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அதிக திறன் உடைய பேட்டரி கட்டமைப்பில் சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது; இதற்கு, நிதியுதவியும் செய்கிறது. தற்போது, தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 1,500 மெகா வாட்டை, ஒரு மணி நேரத்துக்கு சேமிக்கும் பேட்டரி வசதியை, மின் வாரியம் ஏற்படுத்த உள்ளது. இந்த வசதி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், புதுக்கோட்டை, திருச்சி தச்சன்குறிச்சி, திருவாரூரில் உள்ள, 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களிலும், கோவை காரமடை, தேனி தப்பகுண்டு, திருப்பூர் ஆனைகடவு ஆகிய இடங்களில் உள்ள, 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களிலும் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள ஆறு துணை மின் நிலையங்களில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை, ஒரு மணி நேரத்துக்கு சேமிக்கும் பேட்டரி வசதியை ஏற்படுத்த, கடந்த ஜூனில் மூன்று நிறுவனங்களுக்கு, மின் வாரியம் ஆணை வழங்கியது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏழு துணை மின் நிலையங்களில் மின் வாரியம் வழங்கும் இடங்களில், தனியார் நிறுவனங்கள் சொந்த செலவில் பேட்டரி வசதி அமைக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசின், 'பவர் சிஸ்டம் டெவலப்மென்ட் பண்ட்' திட்டத்தின் கீழ், ஒரு மெகா வாட்டுக்கு, 18 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என்றார்.