உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானைகள் இறப்பு ஆண்டுதோறும் அதிகரிப்பு

யானைகள் இறப்பு ஆண்டுதோறும் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில், 2024ம் ஆண்டில், 123 யானைகள் இறந்துள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு காட்டில் யானைகள் இருக்கின்றன என்றால், அதன் எண்ணிக்கை அடிப்படையாக வைத்துதான், அப்பகுதியின் உயிர் சூழல் தரம் மதிப்பிடப்படும். இதனால், யானைகள் பாதுகாப்புக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், வேட்டையாடுதல், விபத்துகள் உள்ளிட்ட காரணங்களால், யானைகள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 2022ல், 113 யானைகள் இறந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து, 2023ல், 129 யானைகளும், 2024ல், 123 யானைகளும் இறந்துள்ளன. மத்திய அரசின் யானைகள் திட்ட அடிப்படையில், இந்த விவகாரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு யானை இறக்கும்போதும், அது தொடர்பான விபரங்களை, முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். இந்த அடிப்படையில், யானைகள் இறப்பு குறித்த தணிக்கை விபரங்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது. இதனால், யானைகள் இறப்பு குறித்த விபரங்கள் வெளிப்படையாக தெரிய வந்துஉள்ளன.

காரணம் குறித்து விசாரணை

இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதில் வயது மூப்பு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக, யானைகள் இறக்கின்றன. யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், அதற்கான வாழ்விட பரப்பளவு விரிவாக வேண்டும். ஆனால், தமிழகத்தில் வனப்பகுதிகளின் பரப்பளவு விரிவாவதில்லை. இதனால், யானைகளுக்கு இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்நிலையில், 2024ல் மொத்தம், 123 யானைகள் இறந்துள்ளன. இதில், 107 யானைகள் இயற்கையாகவும், 16 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் இறந்துள்ளன; இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ