உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த வாரம் அமல்

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த வாரம் அமல்

சென்னை:மது கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 'டாஸ்மாக்' நிறுவனம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்துகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இவை, கண்ணாடி பாட்டிலில் உள்ளன. எனவே, 'குடி'மகன்கள் மது பாட்டில் உள்ள மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டிலை சாலையிலும், மலை பகுதிகளிலும் வீசி விட்டு செல்கின்றனர். இதனால், விலங்குகள், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. அத்திட்டம் நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தேனி, கன்னியாகுமரி உட்பட ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மது பாட்டில் விற்கப்படும் போது, எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன், கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனங்கள், மது கடைகளில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, சென்னை மண்டலத்தில் உள்ள திருவள்ளூர் தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் அத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை