சென்னை : தமிழக அமைச்சர் முத்துசாமி அறிக்கை:கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அதை அடிப்படையாக வைத்து, தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக்' நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்ததை போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்தில், அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது.இந்த தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவன அலுவலர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில், அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.இதிலும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இப்படி, அரசு ஊழியர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.பல வழக்குகளில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளை, அமலாக்கத் துறை தொடர்ந்து மீறி வருகிறது. அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை கண்டிக்கிறேன்.இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நம் அலுவலர்களுடன், தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.