மயிலை நிதி நிறுவன மோசடி விவகாரம் விசாரணைக்கு தயாராகிறது அமலாக்கத்துறை
சென்னை:மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பண்ட் நிறுவன மோசடி விவகாரத்தில், அமலாக்கத் துறைக்கு கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்வதாகவும், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த, 'மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பண்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம், 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் மற்றும் மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பண்ட் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், முதலீட்டாளர்கள் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் மற்றும் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி வைக்க உத்தரவிட்டது.இந்நிலையில், முதலீட்டாளர்கள் நல சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு:இந்த நிதி நிறுவனத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. டிபாசிட் பணத்துக்கு வட்டி கொடுப்பதை, கடந்த பிப்ரவரியில் நிறுவனம் நிறுத்தியது; முதிர்வு தொகையும் தரப்படவில்லை. டிபாசிட்தாரர்கள் தரப்பில், 4,000க்கும் மேல் புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பப்பட்டன; வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நிதி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்பு உள்ளது. 557 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் நிதியை மோசடி செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, அமலாக்கத் துறைக்கு மனு அனுப்பி உள்ளோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. மனுவை பரிசீலித்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவாக எடுக்க அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.