சைபர் குற்றங்களை தடுக்க புதிய கண்டுபிடிப்புகள்; போலீசுக்கு உதவிய பொறியியல் மாணவர்கள்
சென்னை: 'சைபர்' குற்றங்களை தடுக்கவும், நிதி மோசடி நடந்தால், வங்கி கணக்கு வரவு - செலவு அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு உதவி செய்யும் 'சாட்பாட்' என, ஆறு வகை தொழில்நுட்ப வசதிகளை, பொறியியல் கல்லுாரி மாணவர்கள், போலீசாருக்கு உருவாக்கி தந்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 52 பேர், குழுக்களாக சேர்ந்து, இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அப்போது, விசாரணை அதிகாரிகளுக்கு உதவிடும், 'சாட்பாட்' வங்கி கணக்கு வரவு - செலவு அறிக்கையை பகுப்பாய்வு செய்வதற்கான சாதனம் உட்பட, ஆறு வகை தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியுள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த, பி.இ., கணினி அறிவியல் மற்றும் 'சைபர் செக்யூரிட்டி' பிரிவு மாணவர் தீபன்ராஜ் கூறியதாவது: நாங்கள் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வசதியில், பாதிக்கப்பட்ட நபரின் வங்கி வரவு - செலவு அறிக்கையை பதிவேற்றம் செய்த உடனேயே, அவரது வங்கி கணக்கில் இருந்து, சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு எந்த தேதியில், எத்தனை மணிக்கு பணம் சென்றுள்ளது; அவர் இந்த பணத்தை எந்த வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார் என்பது தெரிந்து விடும். மேலும், பாதிக்கப்பட்ட பலரின் வங்கி வரவு - செலவு அறிக்கைகளை பதிவேற்றம் செய்தால், சந்தேக நபர்கள் எத்தனை வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்; அவர்கள் இதற்கு முன் எத்தனை வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை சுருட்டி உள்ளனர் என்ற விபரத்தையும் தெரிவித்து விடும். இதனால், 24 மணி நேரத்திற்குள் மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்கி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். சென்னை ராமாபுரம், எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி மாணவர் சிவகேசவ், மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மாணவர் பாலகுரு ஆகியோர் கூறியதாவது: விசாரணை அதிகாரி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவர்கள் திரட்ட வேண்டிய ஆவணங்கள், ஆதாரங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் என, அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளும் சாட்பாட் வசதியையும் உருவாக்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.