பாலாற்றில் கழிவுநீர் கலப்பை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைப்பு
தமிழகத்தில் பாலாற்றில் கழிவுநீர் கலக்கப்படும் விவகாரத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பாய்ந்து ஓடும் பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதால் பாலாறு மாசடைந்துள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கோரி வேலுார் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது. அப்போது, 'பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''கழிவு நீர் கலப்பை தடுப்பதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை மூடப்பட்டு வருகின்றன,'' என்றார். அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பாலாற்றின் துாய்மை தன்மையை அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாலாறு மாசுபடுவது குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவை அமைக்கிறோம். இந்த குழுவில் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் இடம் பெறுவர். இந்த குழுவிற்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம். பாலாற்றில் கலக்கும் கழிவுநீரின் தன்மையை அடுத்த ஆறு மாதத்திற்கு இந்த குழு ஆய்வு செய்து, மதிப்பீடு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், எவ்வளவு இடைவெளியில் அடுத்தடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆறு மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -