உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் * முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் * முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் கொள்கை பரப்பு இணைச்செயலர் சந்திரகுமார் போட்டியிடுவார்' என, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வரும் பிப்ரவரி, 5ல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரசுடன் கலந்து பேசியதில், தி.மு.க., போட்டியிடுவது என முடிவானது. தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், தி.மு.க., வேட்பாளராக, கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலர் சந்திரகுமார் போட்டியிடுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால், மீண்டும் அக்கட்சியே போட்டியிடும் என்றும், மறைந்த இளங்கோவனின் மகன் சம்பத் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிடம் பேசி, ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., போட்டியிடுகிறது. இதை நேற்று முன்தினம் அறிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, '2026 சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ளது. எனவே, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசித்து, தி.மு.க., போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் வேட்பாளராக சந்திரகுமாரை, தி.மு.க., அறிவித்துள்ளது. கடந்த, 1987ல் அ.தி.மு.க.,வில் தன் அரசியல் வாழ்வை துவக்கிய சந்திரகுமார், விஜயகாந்த ரசிகர் மன்றத்தில் இணைந்து, மாவட்ட தலைவரானார். விஜயகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த சந்திரகுமாருக்கு, தே.மு.தி.க., துவக்கப்பட்டதும், கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படடது.கடந்த 2011ல், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி ஏற்பட்டது. அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், முதல் முறையாக எம்.எல்.ஏ.,வானார். பிரதான எதிர்க்கட்சியான, தே.மு.தி.க., கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்திய தே.மு.தி.க., கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகிய, மூன்று தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் இணைந்தனர். பின், 2016ல் தி.மு.க., வேட்பாளராக ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சந்திரகுமாருக்கு, அதே தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த சந்திரகுமார் மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். முதல்வரின் மனதில் இடம் பிடித்த சந்திரகுமாருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை