சென்னை:'விவாகரத்து வழக்கு தள்ளுபடியானாலும், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை சிவில் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் பிரயோகித்து, பாதிக்கப்பட்ட மனைவிக்கு உதவி செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். மனைவி கொடுமைப்படுத்துவதாக, விவாகரத்து கோரி, கணவர் வழக்கு தொடர்ந்தார். கணவர் தான் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தாக்குவதாகவும், மனைவி கூறினார். இதுகுறித்து, மகளிர் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேல்முறையீடு
வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தங்க நகை, வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தரக்கோரி, மனைவி மனுத்தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், விவாகரத்து கோரிய கணவரின் வழக்கும் தள்ளுபடியானது. இதையடுத்து, தங்க நகை, வெள்ளி, ரொக்கப் பணத்தை திருப்பி தரக்கோரி, மனைவி மேல்முறையீடு செய்தார்.கணவர் பொய்யான விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததற்காக, இழப்பீடும் கோரி, இடைக்கால மனுவும் தாக்கல் செய்தார். பொருட்களை திருப்பி தரக்கோரிய மேல்முறையீட்டு மனுவை, வேலுார் கூடுதல் மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனைவி மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவு:
ஹிந்து திருமண சட்டப்படி, விவாகரத்து வழங்கினால் மட்டுமே, நீதிமன்றம் நிவாரணம் அளிக்க முடியும். விவாகரத்து வழக்கு தள்ளுபடியானால், எந்த நிவாரணமும் வழங்க முடியாது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, சிவில், கிரிமினல், குடும்ப நல நீதிமன்றங்கள் நிவாரணங்களை வழங்க முடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க, நீதிமன்றங்களுக்கான அதிகாரங்களை, பார்லிமென்ட் விரிவுபடுத்தி உள்ளது. குடும்ப வன்முறை சட்டத்தில் அதிகாரங்களை விரிவுபடுத்தி உள்ளதால், ஹிந்து திருமண சட்டத்தில் உள்ள வரைமுறைகள், சிவில் நீதிமன்றத்துக்கான அதிகாரத்தை கட்டுப்படுத்தாது.நீதிமன்றங்களை கட்டிப் போட்ட சங்கிலியை, பார்லிமென்ட் தகர்த்துள்ளது. விவாகரத்து வழக்கு தள்ளுபடியானாலும், பாதிக்கப்பட்ட மனைவிக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, விவாகரத்து வழக்கு தள்ளுபடியானாலும் கூட, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழான அதிகாரங்களை, சிவில் நீதிமன்றம் அல்லது குடும்ப நல நீதிமன்றம் பிரயோகித்து, மனைவிக்கு உதவி செய்ய முடியும்.இந்த வழக்கை பொறுத்தவரை, மனைவியை கணவர் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வருமா என்பதை, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். தன் பொருட்களை திருப்பித் தரவும், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரவும், மனைவிக்கு உரிமை உள்ளது. உத்தரவு
இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், இறுதி விசாரணையின் போது, இழப்பீட்டை நீதிமன்றம் முடிவு செய்யலாம். முழுமையாக திருப்பிக் கொடுக்காமல், குறிப்பிட்ட நகை மற்றும் வெள்ளி பொருட்களை கணவன் திருப்பிக் கொடுத்துள்ளார். இதை, இறுதி விசாரணையின் போது, கூடுதல் மாவட்ட நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.