உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்ற வழக்கில் கைதானால் பிரதமரே ஆனாலும் பதவி போகும் : புதிய மசோதா அறிமுகம்

குற்ற வழக்கில் கைதானால் பிரதமரே ஆனாலும் பதவி போகும் : புதிய மசோதா அறிமுகம்

பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fdsw3aol&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன் நகலை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. பார்லி., நேற்று காலை கூடியதும், பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு சபைகளும் மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் லோக்சபா கூடியபோது, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களான மணிஷ் திவாரி, பிரேம சந்திரன் உள்ளிட்டோர் மசோதாவை தாக்கல் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என கூறி கூச்சலிட்டனர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது. அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''கடும் அமளியில் ஈடுபட்டாலும், சபை அலுவல்கள் தடைபடாது; தொடர்ந்து நடக்கும்,'' என ஆவேசமாக பேசினார். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ரகளை அதிகமாக, லோக்சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பெரும் அமளிக்கு இடையே, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைதான 31 நாட்களில் தானாக பதவி இழக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் நிர்வாக திருத்த மசோதா மற்றும் ஜம்மு- - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அறிமுக நிலையிலேயே இம்மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்., - எம்.பி.,யான மணிஷ் திவாரி, ''இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை,'' என விமர்சித்தார். ஆர்.எஸ்.பி., - எம்.பி., பிரேம சந்திரன், ''அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை படித்து புரிந்து கொள்வதற்கு கூட கால அவகாசம் தராமல், அவசர கதியில் நிறைவேற்ற துடிப்பதற்கு என்ன காரணம்?'' என, கேள்வி எழுப்பினார். காங்., - எம்.பி.,யான கே.சி. வேணுகோபால், ''அரசியலில் நேர்மையுடன் நடக்க வேண்டும் என அறிவுரை கூறினால் மட்டும் போதாது. வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது குற்ற வழக்கில் சிக்கி கைதானதை மறந்து விட்டீர்களா? அப்போது உங்களது நேர்மை எங்கே சென்றது? ''குற்ற வழக்கில் சிக்கிய உங்களுக்கு இந்த மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது,'' என அமித் ஷாவை நோக்கி காட்டமாக குற்றஞ்சாட்டினார். இதனால் கோபமான அமைச்சர் அமித் ஷா, ''உண்மைக்கு புறம்பான தகவலை கூற வேண்டாம். அந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை. அப்போதும் கூட விசாரணைக்காக பொறுப்புடன் ஒத்துழைத்தேன். கைதாகி சிறைக்கு செல்லும் முன்பாகவே, அமைச்சர் பதவியில் இருந்து தார்மீக அடிப்படையில் விலகினேன். இறுதியாக வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவிக்கும் வரை, எந்த பதவியையும் நான் ஏற்கவில்லை,'' என கூறினார். எனினும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஒரு சில எம்.பி.,க்கள் மசோதாக்களின் நகலை கிழித்து அமித் ஷாவை நோக்கி குப்பை போல வீசியெறிந்தனர். இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதை அடுத்து சபையை, சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை, மதியம் 3:00 மணிக்கு கூடியபோது, மூன்று முக்கிய மசோதாக்களையும் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை பார்லிமென்ட்டின் கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு சொல்வது என்ன?

அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளை பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் தான். இருப்பினும் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும்போது, பிரதமர் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு தற்போது அரசியல் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. பதவியில் உள்ளவர்களின் நடத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால், அது அரசியலமைப்பு மீது, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்து விடும். இதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொடுஞ்சட்டம்: ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:லோக்சபாவில் தாக்கல் செய்த 130வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கருப்பு மசோதா. இந்நாள் ஒரு கருப்பு நாள். 30 நாள் கைது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பதவி நீக்கம், விசாரணை இல்லை போன்ற அம்சங்கள் எல்லாம் பா.ஜ.,வின் சர்வாதிகாரப் போக்கு. 'ஓட்டுகளை திருடு, எதிரிகளின் குரல் வளையை நசுக்கு, மாநில சுயஅதிகாரத்தை பறி' ஆகியவை தான் சர்வாதிகாரத்தின் கோட்பாடுகள். இப்படியான சர்வாதிகாரத்துடன் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவுக்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்கும் இம்மசோதா கொண்டு வரப்படுவதை கண்டிக்கிறேன். பிரதமருக்கு கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றவே அரசியலமைப்புச் சட்டத்தையும், அடித்தளத்தையும் களங்கப்படுத்த மத்திய அரசு, முடிவெடுத்து உள்ளது. எந்த சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தன் எதிராளிகளை கைது செய்யும், பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை தனக்கு தானே வழங்கி கொள்வது தான். அதைத்தான் இந்த சட்டத்திருத்தமும் செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. -நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

rameshkumar natarajan
ஆக 22, 2025 11:03

The only concern is being in prison itself doesnt determine that he/she is a culprit? If a particular person is found to be guilty be the court, than he/she can be discqualified. Now, the Law is given to Government officers, who can decide wthether a people elected person can continue in office or not. Its agaisnt the spirit of Constitution.


K.n. Dhasarathan
ஆக 21, 2025 21:16

நல்ல சட்டங்களை கொண்டு வர நல்லவர்கள் வேண்டும், இங்கே அவசரமாக கொண்டு வருவதும், மோசமான சட்டங்களை கொண்டு வருவதும் யாருடைய வேலை ? ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியதை, வெட்கமேயில்லாமல், மறுபடி அதே வேலைகளை செய்கிறார்கள். கேவலப்பட போகிறார்கள்.


vivek
ஆக 21, 2025 21:51

தசரதா. இங்கே விஜய் உங்களுக்கு ஆப்பு வைக்க ரெடி ஆகிட்டாரு


JaiRam
ஆக 21, 2025 21:05

ராஜிவ் வழக்கில் சோனியா சாரி அந்தோனியா மைனாவை விசாரிக்க வேண்டும் ரெடியா


pakalavan
ஆக 21, 2025 17:37

குஜராத்துக்குள்ள அமித்ஷா தலைமறைவா இருந்து கடைசில் பிடிபட்டு ஜெயிலுக்கு போன, அமித்ஸாவுக்கு என்ன யோக்கியதை இருக்கு


ஆரூர் ரங்
ஆக 21, 2025 19:52

பொய்.ராஜினாமா செய்து விட்டு வழக்கை தைரியமாக எதிர் கொண்டவர் ஷா. வழக்கிலிருந்து விடுதலை யான பிறகே மீண்டும் பதவி ஏற்றார்.


ram
ஆக 21, 2025 16:38

தூய்மை இந்தியா திட்டம் இதல்லவோ... கலையெடுக்கும் நல்ல தீர்மானம். என் மோடியை வாழ்த்த வார்த்தைகள் கிடையாது..


raju
ஆக 21, 2025 15:58

பிரதமர் மேல கேஸ் யாரு போடுவா .எத்துணை பிஜேபி முதல்வர் அல்லது கட்சிக்காரர்கள் மீது வழக்கு போட்டுருக்கிறீர்கள் ? எதிர் கட்சி மீது வழக்கு போட வில்லை ?


Rengaraj
ஆக 21, 2025 15:41

இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் அடுத்த நாளே பிஜேபி அல்லாத மாநில முதல்வர்கள் , அமைச்சர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தங்களது பதவி இழந்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் பெரும்பாலானவர்களுக்கு வருவது இயற்கையே. முதலாவது இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை. சட்டம் ஒழுங்கு எல்லாமே மாநில பட்டியலில் வரும். எனவே ஒரு மாநில காவல்துறை நினைத்தால் மட்டுமே அந்த மாநில முதல்வரையோ அமைச்சரையோ கைது செய்யும். நேரடியாக மத்திய அரசு கைது செய்ய முடியாது. உதாரணத்துக்கு நமது செந்தில் பாலாஜி வழக்கில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் நிலைப்பாட்டை ஞாபகபடுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, தொடர்ச்சியாக 30 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தால் மட்டுமே இந்த சட்டத்தின் பிரிவு செயல்படும். உபயோகப்படுத்தப்படும். இதற்கு காவல்துறை ஒருவரை கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் கஸ்டடி எடுக்கவேண்டும். சாதாரணமாக கஸ்டடி 14 நாட்கள் கேட்பார்கள், குற்ற பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்றால் இரண்டாவது முறையாக 14 நாட்கள் கேட்பார்கள் . மூன்றாவது முறையாக ஒருவர் மீது நீதிமன்றக்காவல் நீட்டிப்பு இருக்கும் போதுதான் தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் இருந்ததாக சொல்லப்பட்டு இந்த சட்டபிரிவு செயல்படமுடியும். இப்படி மூன்று முறை ஒரு மந்திரி மீதோ , முதலமைச்சர் மீதோ காவல் நீட்டிப்பு செய்யும் அளவுக்கு தனது அதிகாரம் மூலம் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா என்ன ?? மூன்றாவதாக குற்றத்தின் தன்மையை சொல்லியிருக்கிறார்கள். அதாவது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடியவகையில் அவர் குற்றம் புரிந்திருக்கவேண்டும். அந்த குற்றத்திற்காக உண்டான சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கவேண்டும். காவலில் இருந்து வெளிவந்தவுடனே அவர் மீண்டும் பழைய பதவியை தொடரலாம். இதில் எங்கே பாரபட்சம் உள்ளது.?? நடைமுறையில் மத்திய அரசு ஒரு மாநில அமைச்சர்மீது உடனே நடவடிக்கை எடுக்கமுடியாது. அதற்கு செந்தில் பாலாஜி வழக்கே சாட்சி. ஆனால் அமித்ஷா , இந்த சட்டத்தில் பிரதமர், மத்திய அமைச்சர், இணையமைச்சர், மாநில முதல்வர் , மாநில அமைச்சர்கள் என்று மட்டுமே சொல்லி உள்ளார். எம்பிக்கள், எம்.எல்.ஏ. க்களை கணக்கில் சேர்க்காமல் விட்டு விட்டார். அப்படி விட்டதுதான் தவறு. அவர்களையும் சேர்த்திருக்கவேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற எம்பி அல்லது எம்.எல்.ஏ. தனது பதவியை இழக்கிறார். ஆனால் இந்த சட்டத்தில் ஒருவரின் பதவி பறிபோகிறது என்றால் அவர் ஐந்து ஆண்டுகள் தண்டனை தரத்தக்க குற்றம் புரிந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை மாற்றி இரண்டு ஆண்டுகள் என்று சொல்லியிருக்கவேண்டும். அப்போதுதான் இது ஒரு முழுமையான மசோதா என்று சொல்லலாம். அப்படி சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.


Anandhan
ஆக 21, 2025 15:37

இது தற்போது உள்ள ஆளும் கட்சிக்கும் பொருந்தும் என்று நீங்கள் ஏன் கருதவில்லை? ஆக, பாஜகதான் நிரந்தர ஆளும் கட்சி என ஒத்துக்கொண்டதற்கு நன்றி.


sankar
ஆக 21, 2025 15:27

நம்மாளு யாரோ எழுதி கொடுத்த வசனத்தை ஒப்பிக்கிறார் என்பது மிகவும் தெளிவு


Mohan
ஆக 21, 2025 14:28

இந்த நாட்டுக்கு இது மிகவும் அவசியமான சட்டம்னு புருஞ்சிக்கலாம்