மாலை நேர ஷாப்பிங், சொந்த ஊர் பயணத்தால் திணறிய சென்னை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், மாலை நேரத்தில் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும். அத்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை, புறநகரில் வசிக்கும் பல லட்சம் பேர், சொந்த ஊருக்கு செல்ல, பேருந்து நிலையங்களுக்கு நேற்று படையெடுத்தனர்.இதனால், நகரின் பிரதான பேருந்து நிலையங்களான தி.நகர், வேளச்சேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு புறப்பட்டனர். பலர், சொந்த வாகனங்களிலும் சென்றனர். இதனால், ஆலந்துார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை, வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.அதேபோல், அதிகப்படியான வாகன வரத்தால், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா, புழல் - பெருங்களத்துார் இடையிலான சென்னை பைபாஸ் சாலைகளிலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.இதற்கிடையே, தீபாவளி 'ஷாப்பிங்' செய்யவும் தி.நகர், மயிலாப்பூர், புதுவண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட வணிக நிறுவன பகுதிகளுக்கு, நேற்று மாலை பலர் குவிந்தனர். இதனால், அந்தந்த பகுதிகளில் வாகனங்கள், நீண்ட வரிசையில் அணிவகுத்தன; இந்த போக்குவரத்து சீராக பல மணி நேரமானது.சென்னை அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்கள் நத்தை போல நகர்ந்தன.
ஏ.டி.எம்.,மில் பணம் காலி பயணியர் புலம்பல்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு, நேற்று அதிகமானோர் வந்தனர். இதனால், மொபைல் போன் நெட்வொர்க் முறையாக கிடைக்கவில்லை. இதனால், 'ஆன்லைன்' வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். பேருந்து நிலைய முகப்பில் ஐந்து ஏ.டி.எம்.,கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று இயந்திரத்தில் பணம் காலியானதால், பயணியர் மிகவும் சிரமப்பட்டனர்.