காங்கேயம்: 'என் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் இனி விஜய்க்காக தான் இருக்கும்' என்று, த.வெ.க., தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கண் கலங்கினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் நடந்த த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பழனிசாமி இருக்கும் கட்சியில், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டனர்; மறைத்தும் விட்டனர். அந்த தலைவர்களின் படம், கட்சி பேனர், போஸ்டர்களில் இடம்பெறவில்லை என்று நான் சுட்டிக்காட்டிய பின் தான், அவற்றை ஸ்டாம்ப் அளவில் போடத் துவங்கினர். அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வழி தெரியாமல் இருந்த எனக்கு, வழி காட்டியவர் விஜய். நான் இன்றைக்கு சொல்கிறேன், என் உடம் பில் ஓடுகிற ஒவ்வொரு துளி ரத்தமும் இனி விஜய்க்காக தான் இருக்கும். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், 'தவளை தண்ணியில இழுக்குமாம்; ஓநாய் மேட்டுக்கு இழுக்குமாம்' என்ற கதை தான், உள்ளது. லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் வருகிறது; மெகா கூட்டணி அமையப் போகிறது என்றார் பழனிசாமி. ஆனால், ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. அ.தி.மு.க., மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது; சில இடங்களில் டிபாசிட்டையும் பறிகொடுத்தது. நாமக்கல் பிரசார கூட்டத்தில் பேசிய பழனிசாமி, கூட்டத்தினிடையே த.வெ.க., கொடியைக் காட்ட வைத்து, 'நம்மை நோக்கி கொடியசைக்கின்றனர். பெரிய கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டனர்' என்றெல்லாம் சொன்னார். ஆனால், 'பிள்ளையார் சுழி போட்டதே' உங்களை முடிக்கத்தான் என்பது உங்களுக்குத் தெரியாது. இப்பவும் பிரச்னையில்லை. விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் யாரும் த.வெ.க., கூட்டணிக்கு வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.