| ADDED : பிப் 09, 2024 09:21 PM
சென்னை:சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் கணித்தமிழ் மாநாட்டின் இரண்டாம் நாள் கருத்தரங்கில், 'செயற்கை நுண்ணறிவும் கலைகளும்' என்ற தலைப்பில், சினிமா பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது:பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலைகளை, செயற்கை நுண்ணறிவு மிக எளிமையாக செய்கிறது. கலைத் துறையில் உள்ள பலருக்கு, இதனால் நம் நிலைமை பாதிக்கப்படுமோ என்ற கேள்வி எழுகிறது.செயற்கை நுண்ணறிவு, பல லட்சம் மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வதை போல செயல்படுகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலானோர், ஏ.ஐ., சாதனங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன் வாயிலாக, பலருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. எனினும் 30 கோடி வேலைகள் பறிபோகலாம் எனவும் சொல்லப்படுகிறது. திரைத் துறையில் உள்ள ஓவியர்கள், கதைக்கு ஏற்றதுபோல ஓவியங்கள் வரைவர். அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட, இது எளிமையாக செய்து விடுகிறது. இதற்கு ஏற்றாற்போல நாம் மாறிக்கொள்வது இன்றியமையாதது. நாம் கேட்கும் கேள்விகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு பதில் அளிக்கிறது. இனி வரும் காலங்களில், குழந்தைகளுக்கு கேள்விகளை எப்படி கேட்கலாம் என்பதை சொல்லித் தர வேண்டும். அனைத்து துறைகளிலும் பேசப்படும் முக்கிய தொழில்நுட்பமாக, செயற்கை நுண்ணறிவு இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.