உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டி.ஜி.பி.,யில் எல்லாமே பொறுப்பு தான்

 டி.ஜி.பி.,யில் எல்லாமே பொறுப்பு தான்

மதுரை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தில் ஐ.ஜி., துரைகுமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாததால் இதன்மூலம் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் கிடப்பில் போட வாய்ப்புள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஓய்வுக்கு பிறகு புதிய டி.ஜி.பி., இதுவரை நியமிக்கப்படவில்லை. மத்திய அரசு பரிந்துரைத்த தகுதிவாய்ந்த மூவரில் ஒருவரை நியமிக்காமல் 'அரசியல்' காரணங்களுக்காக தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, பொறுப்புக்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக லஞ்சஒழிப்புத்துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். ஓரிரு வாரங்களில் வெங்கட்ராமன் வந்துவிட, அபய்குமார் சிங் பழைய இடத்திற்கே திரும்பினார். இவர் ஜன.,31ல் பணி ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும் சமயத்தில், அவரது இடத்திற்கு அதே அந்தஸ்தில் தகுதியானவரை அரசு நியமிப்பது வழக்கம். ஆனால் அபய்குமார் சிங் ஓய்வுபெற்ற மறுநாள் லஞ்சஒழிப்புத்துறையில் ஐ.ஜி.,யாக உள்ள துரைகுமாரை 'தலைமை' பொறுப்பில் அரசு நியமித்தது. அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள், ஊழல் புகார்கள், முன்னாள் அமைச்சர்களின் லஞ்ச புகார் வழக்குகளை லஞ்சஒழிப்புத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இச்சூழலில் ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அதிகாரியை ஒட்டுமொத்த லஞ்சஒழிப்புத்துறைக்கும் தலைமையாக அரசு நியமித்துள்ளதால் அவர் தன்னிச்சையாக உத்தரவிட அதிகாரம் இருந்தாலும், தனக்கு உயர் அதிகாரிகளாக உள்ள சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அல்லது ஏ.டி.ஜி.பி.,யிடம் ஆலோசனை கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் 'பொறுப்பு' அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை