உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகளவில் வாங்கி பதுக்குவதால் உரத்திற்கு திடீர் தட்டுப்பாடு வரலாம்

அதிகளவில் வாங்கி பதுக்குவதால் உரத்திற்கு திடீர் தட்டுப்பாடு வரலாம்

சென்னை : உரங்களை விவசாயிகள் அதிகளவில் வாங்கி பதுக்குவதால், சாகுபடி நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் நெல் மட்டுமின்றி, கரும்பு, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி, 25 லட்சம் ஏக்கரில் துவங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு, 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில், 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடவு மானியமாக ஏக்கருக்கு, 4,000 ரூபாயும், விதை நெல்லும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரியா உள்ளிட்ட உரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிற்கு யூரியா அனுப்ப, சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் விவசாயிகள் மத்தியில் பரவி வருகிறது. இதை கேட்டு விவசாயிகள் பலரும் மூட்டை கணக்கில் யூரியா, பொட்டாஷ், கூட்டு உரங்கள், டி.ஏ.பி., ஆகியவற்றை வாங்கி பதுக்கி வருகின்றனர். இதனால், சாகுபடி நேரத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகள் என, 12,258 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது யூரியா, 1.21 லட்சம் டன்; டி.ஏ.பி., 35,900; பொட்டாஷ் 46,800; கூட்டு உரம் 1.60 லட்சம் டன் கையிருப்பு உள்ளன. தேவையான உரங்கள் வழங்க, மத்திய உரத்துறை உறுதியளித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவுவதால், விவசாயிகள் பலரும் சாகுபடி துவங்கும் முன், உரங்களை வாங்கி குவிக்க துவங்கியுள்ளனர்.இதுகுறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iyer
ஜூலை 03, 2025 08:23

ஆமாம் நீங்கள் சொன்னது 100% சரி. சிக்கிம் மாநிலம் போல் இந்திய முழுவதும் - ரசாயன விவசாயத்தை ஒழித்து - இயற்கை விவசாயத்தை தழுவவேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 11:22

எவ்வளவு முயன்றாலும் 140 கோடி மக்களுக்கு இயற்கை விவசாயம் மூலமே மூன்று வேளை உணவளிப்பது சாத்தியமற்றது. காலப்போக்கில் பெரும்பாலான விவசாய நிலங்களில் வளம் குறைந்து விட்டதால் உரம் அத்தியாவசியமாகிவிட்டது. படித்த இளைய தலைமுறைக்கு மாடுகளை வளர்க்கும் பொறுமை சற்றுமில்லை.


R SRINIVASAN
ஜூலை 03, 2025 07:02

இயற்கை உரங்களான மாட்டு சாணத்திற்கு பதில் யூரியாவை பயன் படுத்துவதால் சிறுநீரகங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன என்று ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் .இந்த காலகட்டத்தில் நிறைய மக்கள் ஆர்கானிக் உணவுக்கு மாறி வருகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை