உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 லட்சம் மலர்களுடன் கண்காட்சி செம்மொழி பூங்காவில் துவக்கம்

12 லட்சம் மலர்களுடன் கண்காட்சி செம்மொழி பூங்காவில் துவக்கம்

சென்னை:தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. 12 லட்சம் மலர்களால் வித்தியாசமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சென்னை, தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், இரண்டாம் ஆண்டு மலர் கண்காட்சி, நேற்று துவங்கியது.பத்து நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று துவக்கி வைத்து, மலர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி., தயாநிதிமாறன், அமைச்சர்கள் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம் மற்றும் முதன்மை செயலர் அபூர்வா ஆகியோர் பங்கேற்றனர்.அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் நடத்தப்பட்ட மலர் கண்காட்சி, செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக நடக்கிறது.கடந்தாண்டு, கொய்யாமலர்களை கொண்டு, குளிரூட்டப்பட்ட இடத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த முறை, பூங்காவில் வெட்டவெளியில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை நடந்த கண்காட்சிக்கு, பொதுமக்கள் அதிக வரவேற்பு அளித்தனர்.இம்முறையும், அதேபோல் ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கிறோம். கண்காட்சியில், 12 லட்சம் மலர்களால் பல்வேறு வகையான சிற்பங்கள் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.கண்காட்சியில், ஒவ்வொரு மலரின் பெயர், அதன் தாய்நாடு, அறிவியல் பெயர் அறியும் வகையில் பலகை வைக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் மாறியிருந்ததால், பார்வையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம், பெரியவர்களுக்கு 150 ரூபாய், சிறுவர்களுக்கு 75 ரூபாய், கேமராவுக்கு 200 ரூபாய், வீடியோ கேமராவுக்கு 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மலர் கண்காட்சியை ரசிக்கலாம்.

வெளிநாட்டு மலர்கள்

கண்காட்சியில் யானை, பறவை, ஆமை, பெண் சிலைகள், இதயம், வண்ணத்துப்பூச்சி வளைவுகள் உள்ளிட்டவை, வண்ண மலர்களால் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.இவை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வெளிநாட்டு மலர்களான நெதர்லாந்தின் துலிப், ஜம்மு - காஷ்மீர் லில்லியம் போன்ற மலர்களும், நம் பாரம்பரியமான சாமந்தி, மல்லிகை, நித்திய கல்யாணி, கோழிக்கொண்டை, வாடா மல்லி உள்ளிட்ட மலர்களும் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் பாரம்பரியமான அரிசி, தானிய வகைகளும் விற்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ