சென்னை:மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேர் நீக்கப்பட்டதுடன், மூன்று ஆண்டுகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை சைதாப்பேட்டை, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கலையரங்கம் கட்டு மான பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:அரசு மற்றும் தனியார் மருத்துவ படிப்புகளுக்கு, 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தபோது, ஏழு மாணவர்கள், பிறப்பிட சான்றிதழ்களை போலியாக தந்திருப்பது தெரியவந்தது. மேலும், ஒன்பது பேர் ஜாதி சான்றிதழ்களையும், நான்கு மாணவர்கள் என்.ஆர்.ஐ., எனும் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான துாதரக சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து தந்துள்ளனர். இந்த 20 பேர் போலி சான்றிதழ் தந்திருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதுடன், மூன்று ஆண்டுகள் மருத்துவ கவுன்சிலிங் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல், வரும் 25ம் தேதி வெளியிடப்படும். மத்திய அரசின் கால அட்டவணைப்படி, 30ம் தேதி முதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
2,814 பேருக்கு மறுவாய்ப்பு
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில், 2,814 மாணவர்களின் விண்ணப்பங்களில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லாமல் இருப்பதால், தரவரிசை பட்டியலுக்கான தகுதி பெறவில்லை. இவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெறாத மாணவர்கள் குறித்த பட்டியல், https://tnmedicalselection.net என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களது விண்ணப்ப எண் இருந்தால், தேவையான ஆவணங்களை, 'ஆன்லைன்' வழியாக மாணவர்கள் நாளை வரை பதிவேற்றம் செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.