உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகள் போராட்டம் எதிரொலி: நெல் கொள்முதல் தொகை ரூ.810 கோடி விடுவிப்பு

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: நெல் கொள்முதல் தொகை ரூ.810 கோடி விடுவிப்பு

சென்னை:நெல் கொள்முதலுக்கான நிலுவைத்தொகை 810 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி வழங்கிஉள்ளது.

பெரும் நெருக்கடி

ஆனால், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யாமல், தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி பதப்படுத்துதல் கூட்டமைப்பு என்ற தனியார் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களை தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணத்தை தராமல், 810 கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டது. இந்த தொகையை பெற்று தர வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்பிரச்னை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சு நடத்த, வேளாண் துறை இயக்குநர் முருகேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பேச்சு நடத்தினர்.

அரிசி உற்பத்தி

'கொள்முதல் செய்த நெல்லுக்கு, அடுத்த 15 நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்படும்' என, அந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, 810 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல்லுக்கான பணத்தை, 48 மணி நேரத்திற்குள் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.'இனி வரும் காலங்களில் நெல் கொள்முதலுக்கான பணம் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும்' என, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் மற்றும் தமிழக நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு இணைய கிளை மேலாளர் பீஜாய் ஜான், சம்மேளன மேலாண் இயக்குநர் அம்ருதீன் ஷேக் தாவுத் அறிக்கை: இந்தாண்டு, டெல்டா அல்லாத மாவட்டங்களில், 40,490 விவசாயிகளிடம் இருந்து, 3.31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுஉள்ளது. இதன் மதிப்பு, 810 கோடி ரூபாய். இந்த தொகை, விவசாயிகள் வங்கி கணக்கில் முழுதும் வரவு வைக்கப்பட்டு, மத்திய - மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் பணம் கொடுக்காமல் போனதற்கு, மத்திய தொகுப்பில் இருந்து நிதி வழங்கப்படாதது தான் காரணம். இனி வரும் காலங்களில், கொள்முதல் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை