கடிதம் எழுதி வாலிபர் தற்கொலை விவகாரம்: தந்தை, மகன் கைது
சேலம் : சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம், ஒட்டப்பட்டி ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி, மகன் ராஜா, 25, கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினரான மேஸ்திரி சுரேஷ் என்பவருடன், சென்னையில், 10 நாள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டார். ராஜாவுக்கு சம்பளம் சரிவர கொடுக்காததால், சுரேஷிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டு, ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா, சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ராஜா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிப்பட்டி போலீசார், ராஜா தற்கொலை செய்த இடத்தில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், 'சம்பளம் கேட்ட போது தர மறுத்து அடித்து தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு விழிப்புணர்வு மரணம்' என, எழுதியிருந்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி, வேலைக்கு அழைத்து சென்ற சுரேஷ், 41, கான்ட்ராக்டரான சுரேஷ் தந்தை சேகர், 60, ஆகியோர் மீது, ராஜாவை தற்கொலைக்கு துாண்டியதாக காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் நேற்று தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.