உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம்

 சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம்

சென்னை: 'மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான பெயர் மாற்றத்திற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை' என, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி வசூல் பொறுப்பு, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் உள்ளது. அதேநேரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பணிகள், தமிழக குடிநீர் வாரியம், சென்னை குடிநீர் வாரியத்திடம் உள்ளன. இந்த மூன்றும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பொது மக்கள் ஒருவரிடமிருந்து சொத்து வாங்கிய பின், அதற்கான சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றிற்கு தனித்தனியாக விண்ணப்பித்து, பெயர் மாற்ற வேண்டியிருந்தது. இதற்கு கட்டணம் இல்லை என்றாலும், இது, நடைமுறை சிக்கலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், சொத்து வரி விதிப்புகளுக்கு பெயர் மாற்றத்துக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, குடியிருப்புகளுக்கு 500 ரூபாய், பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 1,000 ரூபாய் வசூலிக்கப்படும். பெயர் மாற்ற கட்டண விபரங்களை, பொது மக்கள் எளிதில் அறியும் வகையில் இணையதளத்திலும், அலுவலக விளம்பரப் பலகைகளிலும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், சொத்து வரி பெயர் மாற்ற விண்ணப்பத்திலேயே, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றை, சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு மாற்ற வேண்டும். இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்க கூடாது. சொத்து வரி பெயர் மாற்ற மனுக்களை வெளிப்படைத் தன்மையுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க வேண்டும். நிலுவையில் உள்ள அரையாண்டு சொத்து வரியை வசூலித்து, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி