உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நில குத்தகை பாக்கி தனியார் கல்லுாரிக்கு அபராதம்

கோவில் நில குத்தகை பாக்கி தனியார் கல்லுாரிக்கு அபராதம்

சென்னை : குன்றத்துாரில் கோவில் நில குத்தகை வாடகை தொடர்பாக, ஆணையரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய வழக்கில், மாதா பல் சூசையா பீட்டர் கல்வி அறக்கட்டளை தலைவர், கோவில் கணக்கில் ௫ லட்சம் ரூபாய் செலுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சேக்கிழார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சோமங்கலம் சாலையில் 36,624 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலம், அதே பகுதியை சேர்ந்த பாலு, சேகர், அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு, 2000ம் ஆண்டில் விவசாயத்துக்காக குத்தகைக்கு விடப்பட்டது. இவர்களிடம் இருந்து, 2001ம் ஆண்டு குன்றத்துார் மாதா பொறியியல் கல்லுாரி தலைவர் பீட்டர், நிலத்தை குத்தகைக்கு பெற்றார். விவசாய பயன்பாட்டுக்கு குத்தகை வழங்கிய நிலத்தில், பல் மருத்துவ கல்லுாரி கட்டியுள்ளார். குத்தகை வாடகை நிலுவை, 1.53 கோடி ரூபாயை கட்டும்படி, அறநிலையத்துறை தரப்பில், பீட்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவில் நிலத்துக்கு பதில் மாற்று இடம் தருவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் பீட்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், 'மனுதாரர், கோவில் நிலத்தை குத்தகை பெற்றவர் அல்ல என்பதால் அவர் ஆக்கிரமிப்பாளர். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. மாற்று நிலம் வழங்கும் முடிவை ஏற்க மறுத்து, அறநிலையத்துறை தரப்பிலும் பதிலளிக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், பீட்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'மாற்று நிலம் தருவதாக கூறியதை கைவிடுகிறோம். வாடகை தொடர்பாக, சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, சீராய்வு மனு தாக்கல் செய்ய, மனுதாரருக்கு அனுமதிக்கிறது. ஆணையர், இந்த சீராய்வு மனுவை பரிசீலிக்கும் முன், மனுதாரர் பீட்டர் கோவில் கணக்கில், 5 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும். இந்த சீராய்வு மனுவை, ஆணையர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை