முடக்கப்பட்ட வங்கி கணக்கு மீண்டும் இயக்க எப்.ஐ.ஆர்., எதற்கு? வங்கிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு கடிதம்
சென்னை:'சைபர் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட நபரின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை மீண்டும் இயக்க, எப்.ஐ.ஆர்., என்ற முதல் தகவல் அறிக்கை கேட்டு, காலதாமதம் செய்யக்கூடாது' என, வங்கிகளுக்கு சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். 'ஆன்லைன்'
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளால் பாதிக்கப்படும் நபர்கள், உடனடியாக, 1930 மற்றும் www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் வங்கிகள் இணைக்கப்பட்டு உள்ளன. புகார் பதிவான உடனே, பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, அதிலிருந்து, சைபர் குற்றவாளிகளால் மேலும் பணம் எடுக்க முடியாமல் தடுக்கப்படும். சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த பணத்தை, வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி இருந்தால், அதிலிருந்து அவர்கள் பணத்தை எடுக்க முடியாமலும் செய்து விட முடியும். ஆனால், புகார் பதிவு செய்வதில் காலதாமதம் இருக்கக்கூடாது.சைபர் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட நபரின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை மீண்டும் இயக்க, எப்.ஐ.ஆர்., என்ற முதல் தகவல் அறிக்கை கட்டாயம் வேண்டும் எனவும், நீதிமன்றங்களில் உத்தரவு பெற வேண்டும் எனவும், வங்கிகள் கூறுவதாக தெரிகிறது. வங்கிகள் அலைக்கழிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர். இணையதளம்
மேலும், மாவட்ட, சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதிகளும், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து முடக்கப்பட்ட தொகையை விடுவிக்க, முதல் தகவல் அறிக்கை வேண்டும் என்று, கேட்டுள்ளனர். இதுபற்றி, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 'www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் செய்யப்படும் புகார் பதிவே போதுமானது என, உத்தரவிட வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, மாவட்ட மற்றும் சிட்டி சிவில் நீதிமன்றங்களுக்கு, உயர் நீதிமன்றத்தில் இருந்து சுற்றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதை சுட்டிக்காட்டி, வங்கிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளோம். பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கை மீண்டும் இயக்க, முதல் தகவல் அறிக்கை தேவையில்லை; காலதாமதம் செய்யக்கூடாது. விசாரணை அதிகாரியின் கடிதம் மற்றும் புகார் மனு ஏற்பு ரசீது போதுமானது என, வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.