உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடி வைக்க துளையிட்ட போது விபரீதம்: 100 டன் பாறை சரிந்து ஐந்து பேர் பலி

வெடி வைக்க துளையிட்ட போது விபரீதம்: 100 டன் பாறை சரிந்து ஐந்து பேர் பலி

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கிரஷர் குவாரியில், 100 டன் எடை கொண்ட பாறை உடைந்து விழுந்ததில், ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான மேகா புளூமெட்டல்ஸ் கிரஷர், ஜல்லி தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை, 200 அடி பள்ளத்திற்குள் இறங்கி, சுற்றியுள்ள பாறையை உடைத்து, அதில் இருந்து ஜல்லி, கற்களை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பாறையை உடைக்க வெடி வைப்பதற்காக, பாறையை குடைந்து துளையிட்டுக் கொண்டிருந்தனர். மணல் அள்ளும் இயந்திர டிரைவரான ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித், 28, பாறையில் துளை போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாறை உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில், ஹர்ஜித், முருகானந்தம், 49, ஆறுமுகம், 50, ஆண்டிச்சாமி, 50, கணேசன், 43, ஆகிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மைக்கேல், 43, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருப்பத்துார் தீஅணைப்பு வீரர்கள், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாறைக்குள் சிக்கிய ஹர்ஜித் உடலை, 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள், நவீன இயந்திரங்கள் உதவியுடன் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக போராடி மீட்டனர்.அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், சப்--கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உயிரிழந்த ஐந்து பேர் குடும்பத்திற்கு தலா, 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Gallery

செய்தியாளர்களுக்கு தடை

விபத்து நடந்த இடத்திற்கு சென்ற செய்தியாளர்களை, திருப்பத்துார் டி.எஸ்.பி., செல்வகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., செல்வகுமார் கூறுகையில், ''மேகா புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்மன், சம்பவ இடத்தில் இருந்த மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர்களை கைது செய்வோம்,'' என்றார்.

ஓடியதால் பிழைத்தோம்

உயிர் தப்பிய தொழிலாளர்கள் கூறியதாவது:காலை 9:30 மணிக்கு, 18 பேர் பள்ளத்தில் பாறையில் வெடி வைப்பதற்காக இயந்திரங்களை கொண்டு துளை போடும் பணியில் ஈடுபட்டிருந்தோம். எட்டு இயந்திரங்களை கொண்டு தொழிலாளர்கள் துளை போட்டனர். மற்றவர்கள் அருகில் நின்றோம். அப்போது பாறை சரிந்து வருவதாக ஒருவர் கூறியதால், அனைவரும் அங்கிருந்து ஓடினோம். குழி தோண்டிக் கொண்டிருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.மூன்று பேரை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம். அவர்களில் இரண்டு பேர் இறந்து விட்டனர். மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். பாறை இடிந்து விழுந்த பிறகு புகை மூட்டம் ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி