மதுரையில் மழைக்கு மிதக்கும் குடியிருப்புகள்
மதுரை:மதுரையில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையால், வைகை ஆற்றின் வட பகுதியில் உள்ள செல்லுார், நரிமேடு, பீபிகுளம், ஆனையூர், ஆத்திக்குளம், மீனாம்பாள் புரம், கூடல்புதுார், முல்லைநகர், மகாத்மா காந்தி நகர், சூர்யா நகர், பார்க் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தத்தளிக்கின்றன. மழைநீர் எப்போது வடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.நேற்று பகலில் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 10 இடங்களில் கனமழை பெய்தது. மதுரை கிழக்கு, சிட்டம்பட்டியில் அதிகபட்சமாக ஒரே நாளில், 10.8 செ.மீ., மழை பதிவானது. தொடர் மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி, பல குடியிருப்புகளிலும், சாலைகளிலும் சூழ்ந்துள்ளது.மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில், நீர்ப்பாசன கண்மாய்களை ஒட்டி குடியிருப்புகள் பெருகிவிட்டன. ஒரு கண்மாயிலிருந்து இன்னொரு கண்மாய்க்கு பல கி.மீ., நீளத்திற்கு வரத்து கால்வாய் வாயிலாக, சங்கிலித்தொடர் முறையில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. கண்மாய்களை சுற்றி குடியிருப்புகள் உருவாகியதால், வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து சாலைகளும், வீடுகளும் உருவாகின. மழை பெய்தாலும், வரத்து கால்வாய்கள் சீராக இருந்திருந்தால் அவற்றின் மூலம் கால்வாய்களுக்கும், அங்கிருந்து கடைசியாக வைகையாற்றுக்கும் தண்ணீர் தடையின்றி சென்றிருக்கும்.அது தடைபட்டதால், தண்ணீர் செல்ல வழியின்றி பல குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மழை தொடர்ந்து பெய்ததால், தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.மதுரை செல்லுார் பகுதியில் உள்ள செல்லுார் கண்மாய்க்கு தண்ணீர் வரும், 2.6 கி.மீ., நீள பந்தல்குடி கால்வாயும் ஆங்காங்கே அகலம் குறைந்ததாலும், குப்பை தேங்கியதாலும், தண்ணீர் கொள்ளளவை தாங்க முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்தது.இதனால், வேறு வழியின்றி ரோட்டை தோண்டி பள்ளம் அமைத்து, அதன் வழியே வடிகால் வசதி செய்து வைகையாற்றுக்குள் தண்ணீரை திருப்பி விடும் பணி நடக்கிறது.மதுரையின் முக்கிய தேவை, செல்லுார் கண்மாய் பகுதியில், 'கட் அண்டு கவர்' எனப்படும் மூடு கால்வாய் அமைத்து, வைகை ஆற்றுக்கு தண்ணீரை திருப்புவதே. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்தபடி, இதற்கு நிதி ஒதுக்கினால், செல்லுார் பகுதி மழைக்காலத்தில் நிரந்தரமாக தப்பும். விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தும், அவை பயன்பாட்டிற்கு வராததால் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் பாய்கிறது. இப்படியே சில நாட்கள் கழிவுநீர் தேங்கி நின்றால், நோய் பரவும் அபாயம் உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்கள் கூறியதாவது:டயஸ், கூடல்புதுார் 40 வீடு பகுதி இளைஞர் நற்பணி மன்ற தலைவர்: சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க முன்னேற்பாடு கள் தேவைகண்ணன், கூடல்புதுார் வைகை 2வது தெரு: வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மழை நீர் புகுந்தது. இரவு முழுதும் துாக்கமில்லை. நீர் எப்போது வடியும் என தெரியவில்லை. இதுவரை அரசுத்துறை அதிகாரிகள் யாரும் பார்வையிட வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 2000 ரூபாய் நிவாரணம், உணவு வழங்கப்பட்டது. மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.லதா, கூடல்புதுார் வைகை 2வது தெரு: வீட்டிற்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் உள்ளே நுழைய முடியவில்லை. வேறு வழியின்றி தெருவில் நிற்கிறேன். இன்னும் மழை பெய்தால் நிலைமை மோசம்தான்.பாலாஜி, முல்லைநகர்: நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், எம்.பி., பார்வையிட்டனர். தற்போது சாக்கடை நீரும் கலந்து வருகிறது. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுபோல் 30 ஆண்டுகளுக்கு முன் பாதிப்பு ஏற்பட்டது.ஷேக் இப்ராகிம், மகாத்மா காந்தி நகர்: குறிஞ்சி முதல் தெரு, பனையடியான் கோவில் தெரு, மகாத்மா காந்தி நகர் பிரதான ரோட்டில் வீடு, கடைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. பிரதான ரோடு தாழ்வாக உள்ளது. இதனால் மழை நீர் தேங்குகிறது. அதன் உயரத்தை அதிகரிக்க வேண்டும். பாதாளச்சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். மழை பாதிப்பு பகுதிகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் பார்வையிட்டனர்.