உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.கனமழை காரணமாக சாத்தனுார் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் திருக்கோவிலுார் அணைகட்டு வந்தடைந்தது. அதை தொடர்ந்து, மலட்டாற்றில், நேற்று அதிகாலை, திடீரென 10 ஆயிரம் கனடிக்கு மேல் நீர் வரத்து இருந்தது.அதன்காரணமாக ஆற்றோரமாக உள்ள ,திருவெண்ணெய்நல்லுார், டி.எடையார், தொட்டிக்குடிசை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், அரசூர், பாரதிநகர், இருவேல்பட்டு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.அரசூர் கூட்ரோடு திருவெண்ணெய்நல்லுார் சாலை, மலட்டாறின் குறுக்கே உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.அப்பகுதியில் உள்ள கடைகள், வீடு, கார், சரக்கு லாரி, ஆம்னி வேன் மற்றும் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் ஆகியவை வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.வாகனங்களை அரசூர், வி.ஆர்.எஸ்., கல்லுாரிக்கு எதிரே திருப்பி, சென்னை - திருச்சி சாலையை ஒருவழிசாலையாக மாற்றி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே சாலையில் சென்றதால் அதிகளவில் நெரிசல் ஏற்பட்டு 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.வெளிமாவட்டங்களிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை மடப்பட்டில் மடக்கி, பண்ருட்டி, திருக்கோவிலுார் வழியாக சென்னை மார்க்கத்திற்கு அனுப்பினர்.அரசூர் கூட்ரோடு பகுதியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அச்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதேபோல், இருவேல்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த வௌ்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருவேல்பட்டு கிராம ஆற்றோர பகுதியில் வசித்து வந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்களை மீட்டு அரசூர் தனியார் திருமண மண்டபம் மற்றும் வி.ஆர்.எஸ்., கல்லுாரிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர்.

52 ஆண்டுகளுக்கு பின்

மலட்டாற்றில் வெள்ளம்----------------சாத்தனுார் அணை நீர் நேற்று முன்தினம் திருக்கோவிலுார் அணைக்கட்டு வந்தடைந்து. அங்கிருந்து திருவெண்ணெய்நல்லுார் பகுதிக்கு வரக்கூடிய ராகவன் வாய்க்கால் வழியாக ஏரிகளுக்கும், கோரையாறு வழியாக மலட்டாறுக்கும் தண்ணீர் சென்றது.இந்நிலையில் நேற்று அதிகாலை ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்து மலட்டாற்றில் வெள்ளப் பெருக்காக மாறியது.கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத வகையில், மலட்டாற்றில் நேற்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவெண்ணெய்நல்லுார் - ஏனாதிமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் பாய்ந்தது.திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் குடியிருப்புகள், கடைகள், ஏ.டி.எம்., பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. திருக்கோவிலுார் சாலையில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைப்பகுதியில் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த வௌ்ளத்தில் சிக்கியவர்களை மீட்புபடை வீரர்கள் ரப்பர் போட் மூலம் மீட்டடு, கிருபாபுரீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் தங்கவைத்து உணவு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை