மாநிலம் முழுதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; இருமும்போது ரத்தம் வந்தால் சிகிச்சை அவசியம்
சென்னை: 'காய்ச்சலுக்கு பின், எட்டு வாரம் வரை வறட்டு இருமல் நீடிக்கும். இருமலின்போது ரத்தம் வந்தால், டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு முன் மழை பெய்த நிலையில், இந்த தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, சுவாசப்பாதை தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுதும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதில், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு குணமடைந்தாலும், சில வாரங்களுக்கு இருமல் நீடிப்பதால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பானது
இந்த வகை இருமல் தானாகவே குணமாக கூடியது என்றாலும், சிலருக்கு இருமும்போது ரத்தம் வர வாய்ப்புள்ளது. அவர்கள் அலட்சியம் காட்டாமல், டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, அரசு பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: காய்ச்சல் காரணமாக சுவாசப் பாதை தொற்றுக்குள் ளான பின், மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை தொடர் இருமல் இருப்பது இயல்பானது. தொற்று ஏற்படும் 100 பேரில், 10 முதல் 25 பேருக்கு, இத்தகைய பாதிப்பு இருக்கிறது. இதற்கு, தொற்றுக்குப் பிந்தைய இருமல் என பெயர். சுவாசப்பாதையில் கிருமிகளால் ஏற்படும் அழற்சியே இதற்கு காரணம். இதைத்தவிர, மேற்புற சுவாசப்பாதையில் சைனஸ் பகுதிகளில் அழற்சி, நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றால், தொடர் இருமல் ஏற்படலாம்.இந்த பாதிப்புகளுக்கு அவ்வப்போது வெந்நீர் பருகி வரலாம். மூச்சு பயிற்சி
வெதுவெதுப்பான தேநீர், சூப் போன்றவை பருகுவதும், எலுமிச்சைச் சாறில் தேன் கலந்து பருகுவதும் பலனளிக்கும். துாசு, புகை உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். அதன்பின், இருமல் கட்டுப்படாவிட்டாலும், இருமும் போது ரத்தம் கசிந்தாலும், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். எக்ஸ்-ரே, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்து, நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவது அவசியம். சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை, டாக்டரின் பரிந்துரையின்படி தான் உட்கொள்ள வேண்டும். எட்டு வாரங்களுக்கு அதிகமாக இருமல் இருந்தால் மட்டுமே, உரிய மருத்துவ சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டும். சாதாரண இருமல் பாதிப்புகளுக்கு அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.