பிளாஸ்டிக் கவரில் உணவு பொட்டலம்; 11 ஆயிரம் கடைகளுக்கு ரூ.15 கோடி அபராதம்
சென்னை : ''சூடான உணவு பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு, 14.62 கோடி ரூபாய் அபரதாம் விதிக்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில், சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:பழைய உணவு பழக்கவழக்கங்கள் மாறி, துரித உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சரியில்லாத உணவுகளால், ஒவ்வாமை, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், வயிற்றுப்புண் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கேன்டீன், மெஸ், சாலையோர உணவகங்களில் பணியாற்றுபவர்களுக்கும், வியாபாரி களுக்கும் தொடர்ந்து சுகாதார பயிற்சி அளிக்கப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டு களில், 6,323 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, 2.66 லட்சம் வணிகர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.மாநிலம் முழுதும், உணவு பாதுகாப்பு துறையால், 7 லட்சத்து, 8,763 ஹோட்டல்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்தும் திட்டத்தில், 1.97 லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுசுழற்சி செய்து, 'பயோடீசல்' தயாரிக்கும் முறையில், 29,665 லிட்டர் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.சூடான உணவு பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 11,025 கடைகளுக்கு, 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில், 'லேபிள்' ஒட்டாத நிறுவனங்களிடம், 26.93 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், 27.48 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.60 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 26,446 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.