உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வலைகளில் டி.இ.டி., கருவி பொருத்த மீனவர்கள் மறுப்பு ஆமைகளை காப்பதில் சிக்கல் என வனத்துறை புகார்

வலைகளில் டி.இ.டி., கருவி பொருத்த மீனவர்கள் மறுப்பு ஆமைகளை காப்பதில் சிக்கல் என வனத்துறை புகார்

சென்னை:மீன்பிடி வலைகளில், டி.இ.டி., எனப்படும் கருவிகளை பொருத்த, மீனவர்கள் ஒத்துழைக்க மறுப்பதால், ஆமைகள் கண்காணிப்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக கடலோரப் பகுதிகளில், டிசம்பர் முதல், மார்ச் வரை, கடலாமைகள் கரையோரம் வந்து முட்டையிடும். சென்னை உள்ளிட்ட, 14 கடலோர மாவட்டங்களில், 45 இடங்களில், கடலாமைகளின் முட்டைகளை சேகரித்து, பாதுகாக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிருப்தி

கடந்த ஆண்டு, 2.50 லட்சம் முட்டைகள் சேகரிக்கப்பட்டதில், 2.15 லட்சம் கடலாமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நடப்பாண்டும் கடலாமை முட்டைகளை சேகரிக்கும் பணிகளில், வனத்தறையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், முன்னர் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு கடலாமைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கரை ஒதுங்குகின்றன. நடப்பாண்டு, டிச., ஜன., மாதங்களில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கின. இதனால், வனத்துறையின் செயல்பாடுகள் மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலாமைகளை காக்க, கடலோரப் பகுதிகளில், 9.26 கி.மீ., தொலைவு வரையிலான பகுதிகளில், இழுவை மடி வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இழுவை வலைகளில், குறிப்பிட்ட காலத்துக்கு கடலாமை வெளியேறுவதற்கான, டி.இ.டி., கருவியை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும், பெரும்பாலான மீனவர்கள், அதை கடைப்பிடிக்காததே, கடலாமைகள் இறப்புக்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.இந்த விதிமுறையை மீறுவோர் மீது, தமிழக கடல்சார் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக அவர்களின் மீன்பிடி உரிமையை ரத்து செய்வது வரை நடவடிக்கை எடுக்க, மீன்வளத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்த, தலைமைச் செயலர் தலைமையிலான சிறப்பு பணிக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பின்னடைவு

தலைமைச் செயலர் உத்தரவுப்படி, சிறப்பு கண்காணிப்புக் குழு அமைத்து, தினசரி ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இக்குழுவில் காவல்துறை, வனத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர். இழுவை வலைகளில், டி.இ.டி., கருவிகள் பொருத்தும்படி மீனவர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இழுவை வலைகளில், பெரும்பாலான மீனவர்கள் இக்கருவியை பொருத்துவதில்லை.விதிகளை மீறும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில், சம்பந்தப்பட்ட துறையின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. டி.இ.டி., கருவி விஷயத்தில் கண்காணிப்பு நிலையிலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடலில் கண்காணிப்பு பணியின் போது வலையில், டி.இ.டி., கருவி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் பெற, தலைமைச் செயலர் தலைமையிலான சிறப்பு குழுவை அணுக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

டி.இ.டி., கருவியில் பிரச்னை என்ன?

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:கடலில் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும், இழுவை வலைகளில் தெரியாமல் சிக்கும் கடலாமைகள் வெளியேற, நடுவில் ஒரு திறப்பு போன்று டி.இ.டி., கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், தேசிய கடல்சார் சூழலியல் நிர்வாக அமைப்பு பரிந்துரை அடிப்படையில், இக்கருவி உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 25,000 ரூபாய். இக்கருவியை பொருத்தும் போது, சில சமயங்களில் கடலாமைகளுடன், சிலவகை மீன்களும் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இழப்புக்கு யார் பொறுப்பு?

இதுகுறித்து தென்னிந்திய மீனவர்கள் நலச் சங்கத் தலைவர் கே. பாரதி கூறியதாவது: கரையில் இருந்து, 9.26 கி.மீ., வரையிலான தொலைவுக்குள், மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை, அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும். அதற்கு மீனவர்கள் முழுமையாக ஒத்துழைப்பர். இழுவை வலைகளில் டி.இ.டி., கருவியை பொருத்தினால், அதிலிருந்து கடலாமைகள் வெளியேறும் போது, மீன்களும் வெளியேறிவிடும். டீசல் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்து, சிரமப்பட்டு பிடித்த மீன்கள் வெளியேறுவதால், வருவாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது என்று கேட்டால், அதிகாரிகளிடம் பதில் இல்லை. கடலாமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், இது விஷயத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இழுவை வலைகளை மட்டுமே காரணமாக சொல்லாமல், இதற்கான வேறு காரணங்கள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். 'ட்ராலர்' படகுகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீனவர்களை அதில் ஈடுபடுத்தியதே மீன்வள துறை தான். இது, பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எங்கள் கருத்தை மீன்வளத்துறை அப்போது புறக்கணித்தது. தற்போது இதுவே காரணம் என்றால் மாற்று வழியை துறை தான் பரிந்துரைக்க வேண்டும். பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால், கடலில் நீரோட்டங்கள் மாறியுள்ளன. சூழலியல் தாக்கம் குறித்து ஆராய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !