உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலாமைகள் நடமாட்டம் அறிய டெலிமெட்ரி சர்வே ; மத்திய அரசு உதவியை நாட வனத்துறை முடிவு

கடலாமைகள் நடமாட்டம் அறிய டெலிமெட்ரி சர்வே ; மத்திய அரசு உதவியை நாட வனத்துறை முடிவு

சென்னை : கடலாமைகள் நடமாட்டம் குறித்த துல்லியமான தகவல்களை, 'டெலிமெட்ரி சர்வே' வாயிலாக பெற, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தை அணுக, தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, 1,706 கி.மீ., தொலைவுக்கு கடற்கரை உள்ளது. இதில், சென்னை, கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், கடலாமைகள் கரைக்கு வந்து முட்டையிடுகின்றன.

நடவடிக்கை

கடந்த ஆண்டு, 2.58 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில், 10,000 முட்டைகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த முறை, இரண்டு மாதங்களில், 1,400 கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கின. முட்டையிட கடலோரப் பகுதிகளுக்கு வரும் கடலாமைகள், விசைப்படகுகள் மற்றும் இழுவை மடிப்பு வலைகளில் சிக்கி இறக்கின்றன.இதுதொடர்பாக, விதிகளை மீறிய மீனவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில், நீண்ட கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, வனத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான நடவடிக்கை களை வனத்துறை ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து, வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக கடலோரத்தில், 9 கி.மீ., தொலைவு வரை, கடலாமைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சிறப்பு குழு அமைத்து, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விஷயத்தில், நீண்ட கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நவீன வசதிகள்

இதற்காக தமிழக கடலோரத்தில், எந்தெந்த சமயத்தில் கடலாமைகள் வருகின்றன என்பது குறித்து, துல்லிய தகவல்களை முன்கூட்டியே அறிய, நவீன வசதிகள் வந்துள்ளன. மத்திய அரசின் இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், 'டெலிமெட்ரி சர்வே' வாயிலாக, இதுதொடர்பான தகவல்களை பெற திட்டமிட்டு இருக்கிறோம்.இதற்காக இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியை கேட்க உள்ளோம். கடலாமைகள் அதிகம் வரும் வழித்தடங்களை அறிந்தால், அங்கு மீன்பிடி படகுகளை முன்கூட்டியே தடுக்க முடியும். இதனால், வரும் காலங்களில் கடலாமைகள் இறப்பை தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

'டெலிமெட்ரி சர்வே' என்றால் என்ன?

இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், செயற்கைக்கோள் உதவியுடன், கடலாமைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதுவே, 'டெலிமெட்ரி சர்வே' எனப்படுகிறது. இந்த முறையில், குறிப்பிட்ட சில கடலாமைகளை பிடித்து, அதன்மேல் குறைந்த திறன் உடைய, ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்படும்.இந்த கருவிகள் செயற்கைக்கோளுடன் இணைக்கப்படுவதால், கடலாமைகள் செல்லும் வழித்தடம் தெரியவரும். அந்த வழித்தடத்தில், எந்த சமயத்தில் எவ்வளவு கடலாமைகள் செல்கின்றன என்பது குறித்த தகவல்கள், செயற்கைக்கோளில் இருந்து, ஆய்வு மையங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி