உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்

தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்

சென்னை: தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், 85, சென்னையில் நேற்று காலமானார். கடலுார் மாவட்டம், நெய்வேலிக்கு அருகில் உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர் நடன.காசி நாதன். சிதம்பரம் பல்கலை, சென்னை பல்கலைகளில் படித்து, தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்து, துறையின் இயக்குநராக உயர்ந்தவர். தமிழகம் முழுதும் கள ஆய்வு செய்து கல்வெட்டுகள், செப்பேடுகள், கல் மற்றும் செப்பு சிலைகளை கண்டெடுத்து, ஆவணப் படுத்தி உள்ளார்; நாணய ஆய்விலும் சிறந்தவர். இவர் கண்டறிந்த பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் கால செப்பேடுகள், வரலாற்றுக்கு புதிய ஆதாரமாயின. இவர், தொல்லியல் துறையின் இயக்குநராக பொறுப்பேற்ற பின், ராஜராஜ சோழனின் 1,000வது பிறந்த நாள் விழாவை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., த லைமையில் நடத்தினார். பூம்புகாரில் கடலடி அகழாய்வு நடத்தி, கடலுக்கடியில் கட்டடங்கள், கப்பல்களின் எச்சங்களை கண்டறிந்தார். தமிழக வரலாறை பொது மக்களுக்கு விளக்க, 'உங்கள் பெருமைகளை உணர்வீர்' எனும் ஆவணப்படத்தை தயாரித்தார். தன் கண்டு பிடிப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும், 90க்கும் மேற்பட்ட நுால் களாகவும், பல்வேறு ஆய்விதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதினார். இவரின் நுால்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் கிடைத்துள்ளன. இவர் எழுதிய, சேகரித்த 3,000க்கும் மேற்பட்ட அரிய நுால்களை, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நுாலகத்துக்கு, சமீபத்தில் வழங்கினார். சென்னை மாடம்பாக்கத்தில் வசித்த இவர், உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார். இவருக்கு திலகவல்லி என்ற மனைவியும், கதிரவன், அருண்மொழி, ஆதித்யன் ஆகிய மகன்களும் உள்ளனர். இவரின் இறுதி சடங்குகள், இன்று காலை 9:00 மணிக்கு, மாடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை