முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.101 கோடி சொத்துக்கள் முடக்கம்
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 100.92 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம்.இவர், 2011 - 2016ல், அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மென்பொருள் நிறுவனம் கட்ட, தனியார் நிறுவனத்திடம், 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, இவர் மீது புகார் எழுந்தது.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, மைத்துனர் பன்னீர்செல்வம் உட்பட, 11 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த அக்டோபரில், வைத்திலிங்கம் வீடு, அவரது மகன்கள் வீடு என, 13க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.வைத்திலிங்கம், தன் தாய் முத்தம்மாள் பெயரில், மகன்கள் பிரபு, சண்முக பிரபு, மைத்துனர் பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக, லஞ்சப் பணத்தை கடனாக வாங்கியது போல கணக்கு காட்டி உள்ளதும், இதற்காக, 'ெஷல்' எனப்படும் பெயரளவில் செயல்படும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் அம்பலமானது. லஞ்சப்பணத்தில் வைத்திலிங்கம் மகன்கள், திருச்சி மாவட்டத்தில் அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 100.92 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.