உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., விடுவிப்பு ரத்து

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., விடுவிப்பு ரத்து

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து, வேலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வேலுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன். இவர், 2006 முதல் 2011 வரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடியே, 15 லட்சத்து 7,577 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள்சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கில்,ஞானசேகரனின் மனைவி மேகலாவும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு, வேலுார் சிறப்பு நீதிமன்றத்தில்நிலுவையில் இருந்தது.அப்போது, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்பதால், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என, ஞானசேகரனும், அவரது மனைவியும், மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த வேலுார் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, 2016ல் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் நேற்று அளித்த தீர்ப்பு:ஞானசேகரன், அவரது மனைவி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தனரா, இல்லையா என்பது, நீதிமன்ற விசாரணையின் வாயிலாக முடிவு செய்யப்படும்.குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை தொடர வேண்டும். வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து, வேலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். வழக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை