சென்னை: கால் உடைந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்க முடியாததையடுத்து, பாதிக்கப்பட்ட பால் வியாபாரிக்கு இலவசமாக பசு மாடு, கன்று வழங்கப்பட்டது.பல்லாவரம் அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்; பால் வியாபாரி. கடந்த மாதம் 16ம் தேதி, தான் வளர்க்கும் மாடுக்கு ஜுரம் மற்றும் காதில் ஏற்பட்ட பிரச்னைக்காக அருகில் உள்ள, பம்மல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு பணியில் இருந்த அரசு கால்நடை மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து, மாட்டை கீழே தள்ளி, அதன் ஒரு பக்க கால்களை உடைத்து, சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பினர். எப்படியாவது மாட்டை காப்பாற்ற வேண்டுமென, கலெக்டர் வரை சென்று பால் வியாபாரி பாச போராட்டம் நடத்தி வந்தார். இது குறித்து, நம் நாளிதழில், கடந்த மாதம் 25ம் தேதி செய்தி வெளியானது.இதையடுத்து, கால்நடைத் துறை அரசு செயலர் சுப்பையன் உத்தரவின்படி, ராஜேந்திரன் வீட்டுக்கு, அரசு கால்நடை ஆம்புலன்ஸ் 27ம் தேதி வரவழைக்கப்பட்டது. பசு, வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஐந்து நாள் சிகிச்சைக்கு பின், மாட்டை குணமாக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ராஜேந்திரன், அந்த பசுமாட்டை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் மாடுகளை பராமரிக்கும் இடத்திற்கு அனுப்பினார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் மோகன், ராஜேந்திரன் வீட்டிற்கு நேற்று சென்று, இலவசமாக நான்கு மாத கன்றுடன் பசு மாடு வழங்கினார்.மேலும், காவல் நிலையத்தில் மாடு சம்பந்தமாக கால்நடை துறை மீது ராஜேந்திரன் கொடுத்த புகாரையும், ராஜேந்திரன் மீது கால்நடை துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரும் ஒருமனதாக பேசி வாபஸ் பெறப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பின், என் மாட்டிற்கு நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இதற்கு தீர்வு கிடைக்க போராடினேன். 'தினமலர்' நாளிதழ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மனமார்ந்த நன்றிகள்.- ராஜேந்திரன், மாடு உரிமையாளர்.