வாடகைக்கு விட வாங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் முடக்கம்: கூட்டுறவு சங்கங்களில் அவலம்
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களை பல தொழில் செய்யும் சங்கங்களாக மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்கங்கள் புதிய தொழில் துவங்க தேவைப்படும் நிதியை, 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 4 சதவீத வட்டியில் கடனாக வழங்குகிறது. அதில், 3 சதவீதம் மத்திய அரசு மானியம். மீதி, 1 சதவீத வட்டியை மட்டும் கூட்டுறவு சங்கங்கள் செலுத்தினால் போதும். தமிழகத்தில் இதுவரை, 2,750 கூட்டுறவு சங்கங்கள், டிராக்டர், உழவு இயந்திரங்களை வாங்கி, மணிக்கணக்கில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும், இது தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், பல சங்கங்களில் வாகனங்கள் பாழாகி வருகின்றன. இதுகுறித்து, கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், உழவு இயந்திரங்கள், வாகனங்கள் வாங்கப்பட்டன. இவற்றை வாடகைக்கு எடுக்க, கூட்டுறவு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். சங்கங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், இந்த விபரம் பலருக்கு தெரிவதில்லை. இதனால், ஒவ்வொரு சங்கத்திலும் லட்சக்கணக்கான செலவில் வாங்கப்பட்ட சாதனங்கள் பாழாகின்றன. எனவே, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாகனங்கள், இயந்திரங்களை முழுவீச்சில் பயன்படுத்த உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல்நோக்கு சங்கங்களாக மாறிய கூட்டுறவு சங்கங்களுக்கு, இயந்திரங்கள் வாடகை வாயிலாக மாதம், 20 முதல் 30 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும்' என்றார்.