சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை: மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதுக்கோட்டை - திருச்சி பிரதான சாலையில், 2024 மார்ச் 19ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வாகனத்தில் சிலை கடத்தி வந்த அஜித்குமார், முஸ்தபா, ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான, அம்மன் உலோக சிலையை பறிமுதல் செய்தனர்.இதில் சம்பந்தப்பட்ட மனோஜ்குமார் என்பவர் தலைமறைவானார். விசாரணையில், அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக அவருக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. கடந்த 16ம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு, மனோஜ்குமார் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அவர்கள் விரைந்து சென்று மனோஜ்குமாரை கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். கடந்த 20ம் தேதி தமிழகம் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசாரை, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டினார்.