தீயணைப்பு பயிற்சி மைய வாடகைக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை:தீயணைப்பு துறை தற்காலிக பயிற்சி மையத்திற்கான வாடகை மற்றும் பயிற்றுநர் படிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, தீயணைப்பு துறைக்கு, 674 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன், காவல் மற்றும் சிறைத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே அடிப்படை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏப்., 2ல், சென்னை செங்குன்றம், கரூர், மதுரை, நெல்லை, சேலம், ராணிப்பேட்டை என, ஆறு தற்காலிக மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவங்கின. இருந்தும், இந்த பயிற்சி மையங்களுக்கான வாடகை மற்றும் பயிற்றுநர் படித்தொகைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி, ஏப்., 24ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து, வாடகை மற்றும் பயிற்றுநர் படி என, 59.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யக்கோரி, தீயணைப்பு துறை டி.ஜி.பி.,யாக இருந்த ஆபாஷ்குமார், அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருப்பதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.